TVS Jupiter: சிங்கிள் டேங்க்கில் 226 கிமீ மைலேஜா?! - உலகின் முதல் CNG ஸ்கூட்டர் - பின்னணி என்ன?

பஜாஜ், உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தி பெயர் வாங்கியது என்றால், ‛நாங்களும் கிளம்பிட்டோம்ல’ என்று உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டராக ஜூபிட்டரை அறிமுகப்படுத்தி விட்டது டிவிஎஸ். 

அண்மையில் டெல்லியில் நடந்த பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த சிஎன்ஜி ஸ்கூட்டரைக் காட்சிப்படுத்தி சில விஷயங்களைச் சொல்லியிருந்தது டிவிஎஸ். அது என்னனு பார்க்கலாம்!

ஜூபிட்டர் 125 சிசி இருக்கிறதல்லவா? அந்த ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன்தான் இந்த ஸ்கூட்டர். அதாவது, டிவிஎஸ் ஜூபிட்டர் CNG. பெட்ரோல் ஸ்கூட்டரின் டிசைனுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் தெரியவில்லை. ஜூபிட்டரில் இருக்கும் அதே 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் இருக்கும். ஆனால் பவர் மற்றும் டார்க் போன்ற டெக்னிக்கல் விஷயங்களில் கொஞ்சூண்டு சக்தி குறையும். அதாவது - இதில் இருப்பது 7.2hp மற்றும் 9.2Nm டார்க் போன்றவைதான். இதுவே ஸ்டாண்டர்டு ஜூபிட்டரில் இருப்பது 8.1hp மற்றும் 10.5Nm  அதனால் நம்ம பெட்ரோல் 125 ஸ்கூட்டர் ஓட்டுவதுபோல் பெர்ஃபாமன்ஸும் பிக்அப்பும் இருக்குமா என்று தெரியவில்லை. ஓட்டினால்தான் தெரியும். ஆனால், அந்த எனர்ஜி இதில் குறையாமல் இருக்கும் என்கிறது டிவிஎஸ். 

TVS Jupiter CNG

அதேபோல் இந்த சிஎன்ஜி ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 80 கிமீ என்றும் சொல்கிறார்கள். ஆனால் ஜூபிட்டர் பெட்ரோலில் அதற்கும் மேல் போகலாம். இந்த பவர் குறைபாடும் வேகமும் குறைவதால், மைலேஜ் எக்குத்தப்பாகக் கிடைக்கும் என்றும் சொல்கிறது டிவிஎஸ். இந்த CNG ஸ்கூட்டர், ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 84 கிமீ தருமாம். இதில் 1.4கிலோ சிஎன்ஜி நிரப்பிக் கொள்ளும் அளவு டேங்க்தான் கொடுத்திருக்கிறார்கள். 2 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும் இதில் உண்டு. மொத்தமாகச் சேர்த்து - அதாவது 1.4 கிலோ சிஎன்ஜி மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் இரண்டையும் வைத்து 226 கிமீ மைலேஜ் கிடைக்கும் என்று அடித்துச் சொல்கிறது. 

ஸ்டாண்டர்டு பெட்ரோல் 125 சிசி ஜூபிட்டர் ரியல்டைமில் 42 - 45 கிமீ வரை மைலேஜ் தரும். ஆனால் இதன் ARAI மைலேஜாக டிவிஎஸ் சொல்வது எவ்வளவு தெரியுமா? 53.8 கிமீ. அப்படியென்றால், இதிலும் 2 லிட்டர் பெட்ரோலுக்கு 107 கிமீ  + 1.4 கிலோ சிஎன்ஜிக்கு 119 கிமீ எனப் புள்ளி விவரம் சொல்கிறது டிவிஎஸ். அப்படியென்றால், ரியல் டைமில் இது சுமாராக 160 - 180 கிமீ தருமா? நீங்கள் ஜூபிட்டர் வைத்திருந்தால் கொஞ்சம் கமென்ட் செய்யுங்கள்.

ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஜூபிட்டர்தான் அந்த விஷயத்தில் கில்லி. அது அண்டர் சீட் இடவசதி. சிஎன்ஜி கார்களில் மட்டுமல்ல; ஸ்கூட்டர்களிலும் அந்த ஸ்டோரேஜ் ஸ்பேஸ் சிக்கல் இருக்கிறது. ஆம், சிஎன்ஜி டேங்க்கை இதில் சீட்டுக்கு அடியில் பொருத்தியிருப்பதால் - ஜூபிட்டரின் தாராளமான 33 லிட்டர் இடவசதி காலி! பைகள் வைப்பது பெரிய டாஸ்க்தான் போங்கள்!

வசதிகளைப் பொருத்தவரை ஸ்டாண்டர்டு மாடல்போல இதிலும் டிஜி-அனலாக் டிஸ்ப்ளே மீட்டர், முன் பக்க ஆப்ரானில் சின்ன ஹோல்டர், யுஎஸ்பி சார்ஜர், ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி போன்றவை இருக்கின்றன. 

TVS Jupiter CNG
எல்லாம் ஓகே! விலை எம்புட்டு? அதை இன்னும் சொல்லவில்லை டிவிஎஸ். இப்போது ஜூபிட்டர் 125 சிசி மாடலின் ஆன்ரோடு விலை சுமார் ரூ.1.07 லட்சம் வருகிறது. சிஎன்ஜி அதைவிட சில ஆயிரங்கள் அதிகமாகவே இருக்கலாம். இந்த CNG ஸ்கூட்டர் வந்தால், மார்க்கெட்டில் எடுபடுமா என்பதை கமென்ட் பாக்ஸில் சொல்லுங்களேன்! 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.