விருதுநகர்: ஜவுளிப் பூங்கா இடத்தில் கிராவல் மண் கடத்தலா? - முள்வேலி அமைத்து கண்காணிக்க கோரும் மக்கள்

விருதுநகர் மாவட்டத்தில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் மத்திய‌ அரசின்‌ நிதி ஒதுக்கீட்டின்‌பேரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமையவுள்ளது. சுமார் 1,052 ஏக்கரில் அமையவுள்ள இந்த ஜவுளி பூங்காவுக்கான திட்ட அலுவலக கட்டுமான பணிகள் ஏறத்தாழ 90 சதவிகிதம் முடிந்துவிட்டன. இன்னும் மீதமுள்ள சிப்காட் கட்டமைப்பு பணிகள்‌ வேக, வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிப்காட் இடத்திற்கு அருகே இரவு பகலாக, சிலர் கிராவல் மண் அள்ளி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. லாரி-லாரியாக மண் அள்ளும் வேலை நடப்பதால் அப்பகுதியே பெரும் பள்ளமாக காட்சியளிக்கிறது. மண் அள்ளப்பட்டுள்ள இடம் சிப்காட்டுக்கு சொந்தமானதா? அல்லது நீர்வரத்து ஓடைப்பகுதியில் அனுமதியின்றி அள்ளப்படுகிறதா? எனவும் சந்தேகம் கிளம்பியது. இது குறித்து விளக்கம்பெற வருவாய்துறையினர் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள், "ஜவுளி பூங்கா‌ அமையவுள்ள இடத்துக்கு அருகே அர்ஜூனா நதியின் நீர் வழித்தடம்தான்‌ உள்ளது.‌ அர்ஜூனா நதி நீர்‌வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு தடைவிதித்தும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மண் அள்ளுதல்

இந்த நிலையில், சிப்காட்டுக்கு அருகே கிராவல் மண் அள்ளுபவர்கள் பொதுப்பணித்துறையிடம் முறையான பாஸ் பெற்றுள்ளார்களா எனத் தெரியவில்லை. அதுபோல், ஜவுளி பூங்காவிற்கான அதிகாரபூர்வ வரைபடமும் கையில் இல்லாததால், கிராவல் மண் அள்ளப்பட்டுள்ள இடம் சிப்காட்டுக்கு சொந்தமானதா என்பதை கண்டறிய முடியவில்லை. மண் அள்ளுபவர்கள்‌ குறித்து விசாரணை செய்ததில், கிராவல் மண் அள்ளுவதற்கு பாஸ் வைத்திருப்பதாக கூறும் நபர்கள், ஆளுங்கட்சி புள்ளிகளின் பெயரைக் கூறி மிரட்டுகிறார்கள்.

லாரிகள்

ஆகவே, இது போன்ற சிக்கல்களை களைய, சிப்காட் பகுதியின் முறையான வரைபடத்தை அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். மேலும் சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைச் சுற்றி முள்வேலி அமைத்து, எல்லை கற்களை நட வேண்டும்" என்றனர்.

சிப்காட் இடம்

இது குறித்து சிப்காட் திட்ட அதிகாரி மணிவண்ணனிடம் விளக்கம் கேட்டபோது, "சிப்காட்டிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தையொட்டியே அர்ஜுனா நதியின் நீர்வழித்தடமும் உள்ளது. அங்கு கிராவல் மண் எடுப்பதற்கு நீர் வளத்துறையிடம் அனுமதி வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.‌ முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி‌, நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார் சுருக்கமாக.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் ஆய்வு நடத்திடுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவைத்தொடர்ந்து அங்குச்சென்ற அதிகாரிகள், கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வண்டல் மண் அள்ளுவதற்காக 04.01.2025 அன்றிலிருந்து 30 தினங்களுக்கு நடைச்சீட்டு பெற்று, சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அஜிதா அளித்த புகாரின்பேரில் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சினி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், மண் கடத்தலில் ஈடுபட்ட 9 லாரிகள், 2 ஜே.சி.பி.மற்றும் 1 கிட்டாச்சி வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.