வேங்கைவயல் வழக்கு: ``மலம் கலந்த இருவர்... மூவர் மீது குற்றப்பத்திரிகை! - நீதிமன்றத்தில் தமிழக அரசு
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தையும் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 147 நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, பலரிடம் குரல் மாதிரி சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். இதை அடுத்து இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். அடோடு, வழக்கு விசாரணையை 2 மணிக்கு மேல் ஒத்தி வைத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


