மார்பிலே பட்ட காயம்! - ஒரு ராணுவ வீரரின் கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
1970களில் ஆனந்த விகடனில் வெளியான வாசகர் கதை இது. இந்த சிறுகதை ரூ.1500 பரிசையும் வென்றது. வாசகர் பால விஸ்வநாதன் எழுதிய இந்த சிறுகதையை மை விகடன் பக்கத்திற்காக காந்திமதி உலகநாதன் தொகுத்து வழங்கியுள்ளார்.
நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. இன்று நடந்தாற்போல் இருக்கிறது. அம்மா தன் ஆபீஸ் அறையில் வெளியே அனுப்பிய காஸ் சிலிண்டர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
அம்மாவின் முகமோ நான்கு வருடங்களைப் பத்தாகக் காட்டியது..
அம்மாவா இவள்? முன்பு நாங்கள் சேர்ந்து வெளியில் சென்று வரும் போதும் என் சிநேகிதிகள் அக்காவா என்று கேட்பார்கள். அப்படி ஒரு தோற்றம். அப்பாவிடம் சென்று சிணுங்குவேன்.
அவரோ கடகட வென சிரித்துவிட்டு, "அதென்னவோ பிந்து! நான் உன் அம்மாவைப் திருமணம் செய்து கொண்ட போது எங்களிடையே எட்டு வயது வித்தியாசம் இருந்தது. இப்போது நீயே பார்க்கிறாயே! இருபது வயது சிறியவளாகத் தெரியவில்லையா?இந்த இளமை ரகசியத்தை கண்டிப்பாக உன் அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்", என்பார்.
என் அப்பா, டியர் டாடி, ஓ! நினைப்பே நெஞ்செல்லாம் இனிக்கிறது. அருவி கொட்டியது போல எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்.
விளையாட்டும் கண்டிப்பும் மிக நேர்த்தியான முறையில் அவரிடம் கலந்திருந்தன. அடிக்கவும் அணைக்கவும் ஏற்ற உறுதியான நீண்ட கரங்கள்.
நடை உடை பாவனை பேச்சு பழகும் முறை எல்லாவற்றிலும் ஆர்மிக்காரர்களின் முத்திரை இருக்கும் . என்ன பர்சனாலிட்டி! விறைத்து நிற்கும் மீசையும் நிமிர்ந்த மார்பும் பரந்த தோள்களும் கூர்மையான சிறிய மின்னும் கண்களும் ஆறடி உயரத்துக்கு ஆஜானுபாகுவாக என் அப்பா சந்தேகம் இல்லாமல் ஆண் அழகன்தான். அம்மாவுக்கு அப்பா ஹீரோ. அப்பாவுக்கும் மனைவி டார்லிங் மதுவின் பெருமைதான் .
அப்பாவின் கம்பீரமும் அம்மாவின் நளினமும் அவர்களை நண்பர்களிடையே மேட் ஃபார் ஈச்சதர் கப்பிள் என்று சொல்ல வைத்தன.
இப்போது அம்மா களைத்து காணப்பட்டாலும் நளினத்துடன் ஒரு கம்பீரம் கலந்து தெரிகிறாள். டெலிபோனில் ஏதோ பேசிவிட்டு அன்றைய வேலை முடிந்து விட்ட திருப்தியுடன் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்கிறாள் நானும் தனியே எத்தனை நேரம் உட்கார்ந்து படிக்க முடியும்!
தங்கை இந்து எதிர் வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பாள் அதோ இந்துவின் சிரிப்பு எங்கே கேட்கிறது.
அப்பா வேலை விஷயமாக டூர் போய்விட்டால், அந்த நாட்களை சபித்த நாங்கள் இப்போது அவர் இல்லாமல் 4 ஆண்டுகளை கழித்து விட்டோம் எப்படி விரட்டினாலும் நிறுத்தினாலும் நாட்கள் ஒரே சீராகத் தான் போகின்றன.
இதோ அப்பா வந்து விடுவார்! என்று கார் சத்தம் கேட்டாலே ஓடிப் போய் பார்ப்போம் இப்போது அவர் வரவே மாட்டார் என்று தெரிந்து எங்கோ எதையோ எதிர்பார்த்து நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

அந்த நாட்களில் அப்பா வெளியூர் போய் வந்து விட்டால் போதும் ஷேர்சிங் அப்பாவின் பெட்டிகளை கொண்டு வந்து வைப்பான். அவ்வளவுதான்.
நானும் இந்துவும் அதைக் குடைந்து எங்கள் பெயர் போட்டு அழகாக கட்டப்பட்டிருக்கும் பரிசுகளை எடுத்துக் கொண்டு, தேங்க் யூ டாடி! அம்மாவுக்கு என்ன! என்போம் அம்மாவுக்கு இல்லாத பரிசோ "அதெல்லாம் தனிமையில்தான் "என்று கண் சிமிட்டுவார் ஷேர் சிங் அப்பாவுக்கு பிடித்த முறையில் டீயும் பிஸ்கட்டும் ட்ராலியில் வைத்துக்கொண்டு வருவான்.
"பார்த்தாயா! இந்த வீட்டில் என்னை கவனிக்க இந்த ஷேர்ஷிங் ஒருவன் தான் அவன் கை டீயே மணக்கிறது சபாஷ் ,ஷேர் சிங்! "என்று முதுகில் ஒரு தட்டு. ஷேர்சிங் குழைந்துவிடுவான். ஸாப் ஸாப் என்று விசுவாசம் உள்ள நேர்மையான பஹாடி அவன்.
"அம்மா எங்கே தன் அந்தபுரத்துக்கு போய் விட்டாளா! நான் வந்த உடனே சமையலறைக்கு ஓடி விடுகிறாள்!"
அம்மாவோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி ஷேர் சிங் உதவியுடன் அப்பாவுக்கு பிடித்த ஐட்டங்களாக சிக்கன் பிரியாணி, சூப் என்று கம கம எனறு தயார் செய்து வீட்டையே மணக்க வைப்பாள்.
அப்பாவும் "இப்படி சமைத்து போட்டு என்னை கெடுத்து விட்டாள் அம்மா வெளியில் சென்றால் ஒன்றுமே ருசிக்கவில்லை" என்பார்.
"பிந்து, குக்கரில் சத்தம் வருகிறது பாரம்மா!" என்று கூறியபடி அம்மா தன் ஆபீஸ் அறையை மூடிவிட்டு உள்ளே வருகிறாள்.
"இதோ போகிறேன் ,இந்துவை கூப்பிடட்டுமா? நிம்மியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள் சரியான கேரம் பைத்தியம் ."
"அவள் கவலையில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கட்டும். "
பாவம் அம்மா! அவளுக்கே விளையாட்டுகளில் ரொம்ப ஈடுபாடு உண்டு. இப்போது போலவா இருப்பாள்.
மத்தியான வேளைகளில் எங்கள் வீட்டில் பெண்மணிகளின் கொட்டம் தான். ரம்மி, பிரிட்ஜ் ,மாஜாங் என்று வீடு அமர்க்களப்படும் பாவம் ஷேர் சிங்! சுடச்சுட பஜ்ஜி ,பகோடா, சிப்ஸ், டீ என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பான் . அப்பா வந்தவுடன் அம்மா ஜெயித்த இரண்டு ரூபாய்க்காக காரில் எங்கோ கூட்டிக்கொண்டு போய் பத்து ரூபாய் செலவழிப்பார்.

மதுவுக்கு தோல்வியே கிடையாது என்னிடம் சண்டை போட்டாலும் வெற்றி ஜெனரல் மதுவுக்குத்தான் என்பார். அப்பா பிரிகேடியரானதால் அம்மாவை ஒரு ரேங்க் அதிகமாக வைத்து ஜெனரல் என்றுதான் சொல்வார் எப்போதாவது அம்மா தோற்று விட்டால் முகம் தொங்கிவிடும் அம்மாவின் மூடை சரி செய்ய அப்பா உடனே சினிமாவுக்கு கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார்.
மம்மி , இதோ இந்து ஓடி வருகிறாள்.
"நிம்மி வீட்டில் எல்லோரும் படத்திற்கு போகிறார்கள் என்னையும் ரொம்ப கூப்பிட்டாள் நான் உன்னோடு தான் போவேன் என்று சொல்லிவிட்டேன் போகலாமா கிளம்பேன் ,என்று அம்மாவைத் தாஜா செய்கிறாள்.
"இன்றைக்கு களைப்பாக இருக்கிறது நாளைக்கு கண்டிப்பாக போகலாம்" என்று அம்மா சொல்கிறாள்.
தொங்கிய முகத்துடன் இந்து பாடப் புத்தகங்களுடன் அமர்ந்திருக்கிறாள்.
பாவம் அம்மாவுக்கு ஓயாத வேலை. பழக்கம் இல்லாத உழைப்பு. டீ போட்டுக் கொண்டு வந்து அம்மாவிடம் நீட்டுகிறேன். மேம்ஸாப்பை உபசரிக்க இப்போது ஷேர் சிங் இல்லை.
"பிந்து! தாங்க்யூ! ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா? "
"இல்லைம்மா! வந்தால் சொல்ல மாட்டேனா?"
"எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். நமக்கு எழுத நேரம் வேண்டாமா? ", அம்மா தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள்.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து கடிதங்களாவது வரும். படிப்படியாக குறைந்து கடிதங்கள் வருவதே துர்லபம் என்று ஆகிவிட்டது. அதோ இந்து மேஜை மேல் தலையைக் கவிழ்த்து தூங்கிவிட்டாள். வீடே நிசப்தமாக இருக்கிறது.
எப்படி இருந்தது அப்போது! பிரிகேடியர் நாயர் வீடு என்றாலே உற்சாகமும் கேளிக்கையும் கரை புரண்டு ஓடும் என்றுதான் சொல்வார்கள்.
பணத்தை வாரி இறைப்பதில்அப்பாவுக்கு நிகரே இல்லை.எது வேண்டுமானாலும் அப்பாவைக் கேளுங்கள் என்பாள் அம்மா. பணம் இருந்துவிட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும்.. இல்லையென்றால் அதே சிரிப்புடன் கையை விரித்து விடுவார்.
இந்துவை எழுப்பி நாங்கள் மூவரும் சாப்பிட அமர்கிறோம். அப்பாவின் இடம் காலியாக இருக்கிறது. அதென்னவோ அம்மா தினமும் அங்கும் ஒரு பிளேட்டை வைத்து விடுவாள். நாங்கள் அதை தடுத்ததும் இல்லை. ஏதோ பேசி மௌனத்தைக் கலைக்கிறேன். இயற்கையாக இல்லையே.
"இந்து! சரியாக சாப்பிடு. நாளை சினிமாவுக்கு போகும் போது உனக்கு சல்வார் வேண்டுமென்றாயேஅதையும் வாங்கி வருவோம் "என்று கூறுகிறாள் அம்மா.
இந்துவின் கூரிய சிறிய கண்களில் சிரிப்பு.
அதே கைகளுடன் அம்மாவைக் கட்டிக் கொண்டு விட்டாள்.இந்து எல்லாமே அப்பா மாதிரி இருப்பதாக தோன்றுகிறது எனக்கு.
மடமடவென்று சாப்பிடும் அவள் சுறுசுறுப்பை பார்த்துச்சிரித்துக்கொள்கிறேன்.
அம்மா கெட்டிக்காரி. இல்லையென்று சொல்லாமல் திட்டமிட்டு செலவு செய்கிறாள். எல்லாம் அனுபவம் தந்த பாடம்.
எவ்வளவோ மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்த போதுதான் இந்தியா பாகிஸ்தான் யுத்தம் துவங்கியது. அம்பாலாவே போர்க்கோலம் பூண்டு விட்டது. ஸைரன், ப்ளாக் அவுட் எல்லாமே அத்துபடியாகிவிட்டன.

அப்பாவின் கண்களில் அசாதாரண துடிப்பு. திரண்ட தோள்களில் தினவெடுத்ததோ. அப்பாவின் கவனமெல்லாம் போரில். மற்றவை அதன்பின்னே மறைந்துவிட்டன. யுத்த விமானங்களின் சத்தமும் ஜீப்களின் போக்குவரத்தும் நம்முள்ளே ஒரு திட நம்பிக்கையையும் வீரத்தையும் தூண்டின.
அப்பாவுக்கு அழைப்பு வந்துவிட்டது.
டெலிஃபோனைக் கீழே வைத்துவிட்டு ஷேர் சிங் !என்று கர்ஜித்தார்.
பழக்கப்பட்ட ஷேர் சிங் புரிந்து கொண்டு அப்பாவின் தேவைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.
இந்துவுக்கு ஒரே குஷி . பக்கத்து வீட்டு சிறுமியிடம், "என் டாடி சண்டையில் டுமீல் டுமீல் என்று சுட்டு எதிரிகளை கொன்று விட்டு வரப் போகிறார்",
என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மா மிகவும் கலக்கமாக இருந்தாள். கண்களில் கண்ணீர் தளும்பியது.
எனக்கு இனம் புரியாத வேதனை. அம்மாவைப் போல் அழவும் வெட்கம். இந்துவைப் போல் சிரிக்கவும் முடியவில்லை.
"டேக் இட் ஈஸி டாமிட்பா !"அம்மாவின் கண்ணீரைத் துடைத்து விட்டார்அப்பா.
இது அப்பாவினுடைய மன வலிமையைக் காட்டும் எனக்கு பிடித்த வாக்கியம்.
அம்மா பூஜை அறைக்குள் நுழைந்து விட்டாள். ஊதுவத்தி மணத்தது. பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.
குருவாயூர் கிருஷ்ணனும் ஐயப்பனும் எல்லாவற்றையும் அறிந்தும் அப்படியேதான் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முக்கோண வடிவிலான ஒரு சிவப்புத் துணியைத் தட்டில் வைத்து கற்பூரத்துடன் அப்பாவின் முன்னே நீட்டினாள். அப்பா அந்த துணியைத் தொட்டு கற்பூரத்தை ஒற்றிக்கொண்டார்.
அப்பா பூஜை செய்ததே கிடையாது ஆனால் அம்மாவின் பூஜையிலும் பக்தி விவகாரங்களிலும் தலையிடவே மாட்டார்.
"இன்று நம் நாட்டில் பக்தியும் கலாச்சாரமும் இந்த நிலையில் இருப்பது நமக்கு பெருமையானால் அதன் முழு பொறுப்பு அம்மா போன்ற பெண்மணிகளுடையதுதான்", என்று மனம் நெகிழ சொல்லுவார்.. அம்மா பூஜை அறையில் இருந்து வெளியேறினாள்.
"பிந்து ,பூஜை அறையை நாளைக்கு நன்றாக சுத்தம் செய். நாளைக்கு அப்பாவின் பிறந்தநாள். அப்பேர்ப்பட்ட ஒரு உத்தமமான வீரருடன் எனக்கு இத்தனை மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுத்தாரே கடவுள் யுகம் யுகமாக அப்பாவுடன் வாழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அப்பா நம்மை விட்டு எங்கே போய்விட்டார்? இங்கேதான் இருக்கிறார்." அம்மாவின் கண்கள் எதிர் அறையில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாவின் யூனிஃபாரத்தை பாசத்துடன் பார்த்தன.
ஷேர் சிங் உதவி செய்ய அப்பா தன் யூனிஃபாரத்தை அணிந்து கொண்டார் நிமிர்ந்த மார்பில் கலர் ரிப்பன்களின் வரிசை- பளபளவென்று பட்டன்கள் - மொடமொடக்கும் உடை.
இந்த நிலையில் அப்பாவை நாங்கள் அதிகம் தொட்டுக் கூட பேசமாட்டோம். சாதாரண உடையா அது?
அம்மா மட்டும் காலர் பட்டன் எதையாவது சரி செய்து விடுவாள். அது அவள் உரிமை.ஏகபோக உரிமை.
"ஜெனரல் மதுவுக்கு மட்டும் என் உடையில் ஏதாவது ஒரு குறை தெரியும். ஜெனரல் சாப் எல்லாம் சரியாக இருக்கிறதா!" என்று லெஃப்ட் ரைட் நடந்து காட்டுவார். அதே உடையில் அப்பா நின்றிருந்தார்.
"மது எல்லாம் சரியாக இருக்கிறதா ?" அம்மா கனவில் நடப்பது போல நடந்து வந்து அப்பாவின் தோள் பட்டை பட்டனைத் தடவிவிட்டு அப்பாவின் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். கண்ணீர் பெருகியது. அப்பாவும் சிறிது வித்தியாசமாகவே காணப்பட்டார்.
"டேக் இட் ஈஸி டாமிட்பா!" என்று அம்மாவின் தலையை வருடியபடி உடைந்த குரலில் சொல்லி விட்டு ஒரு போலிச் சிரிப்பு சிரித்தார்.
அந்த உடையுடன் யாரையுமே தொடாத அப்பா இந்துவை அப்படியே தூக்கிப் போட்டு முத்தமாரி பொழிந்தார்.
இந்துவும் மீசை குத்துகிறது என்று வழக்கம் போலவே அழகு காட்டினாள்.
கிளம்பும் சமயம் வந்து விட்டது.
"குருவாயூர் அப்பனை நினைத்துப் புறப்படுங்கள் . அவன் துணை நிற்பான்" என்று அம்மா தழதழக்க சொன்னாள்.
"மது , எதிரிகளை சின்னாபின்னமாக்கி வெற்றியுடன் இந்தியா வந்து உன்னிடம் சரணாகதி அடைந்து விடுகிறேன். சரிதானே!" கலகலவென்று ஒரிஜினல் சிரிப்பு வந்துவிட்டது.
"ஒகே பிந்து! டேக் கேர் ஆஃப் மம்மி "என்று என் தலையைப் பிடித்து ஆட்டினார்.
அப்பாவின் கன்னத்தில் உதடுகள் நடுங்க முத்தமிட்டேன்.
அம்மாவை அணைத்துக்கொண்டு அப்படியே ஜீப் வரை சென்றார். கடமை ஒன்றையே அறிந்த ஷேர் சிங் எல்லாம் தயாராக செய்துவிட்டு ஸாப்புக்காக ஜீப் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்பா ஜீப்பில் உட்கார்ந்த உடன் கம்பீரமாக நின்று அப்பாவுக்கு சல்யூட் அடித்தான் ஷேர்சிங். பதில் சல்யூட்டுடன&
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


