ஏலகிரி: `முக்கியமான சுற்றுலாத்தலத்தில் கழிவறை வசதிக்கூட இல்லை! - சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குறிப்பாகக் கோடைக்காலங்களில் குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் இந்த இடத்தில் உள்ள படகு சவாரி, இயற்கை பூங்கா, வியூ பாயிண்ட் போன்ற இடங்களில் சூழ்ந்து கொள்வார்கள். இப்படி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரி மலையில் அடிப்படை வசதி இல்லாமல், சுகாதாரக் கேடாக உள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
இது குறித்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் விசாரித்த போது, "ஏலகிரி மலையில் சுற்றிப் பார்ப்பதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளது. ஆனால் ஓடி , ஆடி விளையாடிய பிறகு ஆத்திர அவசரத்துக்குப் போவதற்கு ஒரு பொது கழிவறை இல்லையே... ஆண்கள் நாங்கள் எதோ கொஞ்சம் சமாளித்துக் கொள்வோம். வீட்டுப் பெண்கள் என்ன செய்வார்கள்... இங்கே உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கு சரியாக கட்டணத்தைச் வசூலிக்கும் அரசாங்கம், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.
அதேபோல், பெண் ஒருவர், ``இவ்வளவு மக்கள் வந்து செல்லும் இடத்தில் அடிப்படையாக ஒரு கழிவறை கூட இல்லையென்றால் எப்படி. பெண்கள் நாங்களெல்லாம் எங்கே செல்வது?" என ஆதங்கப்பட்டார்.
இதைப் பற்றி அங்கு உள்ள கடைக்காரர்கள் மற்றும் மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகையில், "எங்களிடம் வந்து தான் கழிவறையை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். ஒரு சிலர் என்றால் பரவாயில்லை பெருமளவில் பொதுமக்கள் வந்து இதேபோல் கேட்கிறார்கள். மருத்துவமனை என்பதால் வருபவர்களுக்கு எதாவது பிரச்னை இருந்தாலோ இல்லை நோயாளிகளிடம் இருந்து எதாவது வியாதி தொற்றிக் கொண்டால் என்ன செய்வது" என்று கூறுகின்றனர்.

மேலும், குடிநீர் குழாய்களில் அடிக்கடி குடிநீர் வராமல் போய்விடுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இங்கு பொதுக் கழிவறை இல்லாததால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சிலர் ஆங்காங்கே வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதால் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால், இங்கு வரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் நோய் பரவும் அபாயம் உருவாகியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து ஏலகிரி மலை வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, "இந்த இடத்தில் இருக்கும் பிரச்னையை மேல் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


