PSLV C60 : விண்ணில் பாய்ந்த PSLV C60; சவாலில் வெற்றிகரமாக சாதித்த இஸ்ரோ - முழு விவரம் இங்கே!
PSLV-C60
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, PSLV-C60 ராக்கெட் நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் (டிசம்பர் 29) இரவு 8:85 மணிக்குத் தொடங்கியது. இதனையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு விண்வெளி ஆய்வு மையத்தின் 1வது தளத்தில் இருந்து ஏவப்பட்டது.
PSLV-C60 குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்
2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் என்ற ஆய்வு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகத்தான் இந்த PSLV-C60 ராக்கெட்டின் பயணத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது வெற்றிகரமாக முடிந்தால், இந்தியா இந்த சாதனையை அடையும் நான்காவது நாடாகக் கருதப்படும். இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விண்கலன்களை ஒருங்கிணைத்து சாதனைப் படைத்திருக்கிறது.
இரண்டு விண்கலன்கள்
44.5 மீட்டர் உயரமுள்ள PSLV-C60 ராக்கெட் இரண்டு விண்கலன்களைக் கொண்டு சென்றிருக்கிறது. விண்கலன் ஏ மற்றும் பி, ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடையுள்ளவை. இதில் 14 ஆய்வுக் கருவிகள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்தது. மீதமுள்ள 10 கருவிகளை கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்திருக்கிறது. பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு விண்கலன்களும் நிலை நிறுத்தப்பட உள்ளன.

பயன்பாடுகள்
விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைப்பதற்கும், ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணில் அனுப்புவதற்கும், சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளவும் இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING திட்டம் அவசியம் என்றும், நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பவும் இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் இரண்டு விண்கலன்களும் வெற்றிகரமாக பிரிந்திருக்கிறது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், "ஒரு வார இடைவெளியில் 2 செயற்கைகோள்களும் அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றிணைக்கப்படும். வரும் ஜனவரி 7ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல ஸ்பேஸ் டாக்கிங் திட்ட இயக்குநர் சுரேந்திரன் பேசுகையில், ``மற்ற செயற்கைக்கோள் போல் அல்லாமல் ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில், மிக வேகமாக பயணிக்கக்கூடிய 2 செயற்கைகோள்களை மிக துல்லியமான சென்சார் மூலம் விண்வெளியில் பிரித்து, மீண்டும் ஒன்றிணைப்பது சவாலானது" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


