பாமக: `நான் சொல்வதுதான் முடிவு’ சீறிய ராமதாஸ் ; மைக்கை வீசிய அன்புமணி - கருத்து மோதலின் பின்னணி?
புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.க-வின் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது `பா.ம.க-வின் இளைஞரணி தலைவராக இன்று முதல் முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்’ என்று அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ்.
அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அன்புமணி ராமதாஸ் திடீரென மைக்கை கையில் எடுத்து, ``அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும் ? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், `யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.
இது நான் உண்டாக்கிய கட்சி” என்று சீறினார் ராமதாஸ். அதற்கு மௌனமாக சிரித்துக் கொண்டே, `சரி’ என்றார் அன்புமணி. அதற்கு, `என்ன சரி… சரியென்றால் போ அப்போ..” என்று டென்ஷனானார் ராமதாஸ். தொடர்ந்து பேசிய ராமதாஸ், ``மீண்டும் சொல்கிறேன். முகுந்தன் பரசுராமன் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார். கை தட்டுங்கப்பா…” என்றார். அப்போது, ``குடும்பத்துல இன்னொருத்தரைப் போடுங்க” என்று கூறிவிட்டு ஆவேசமாக மைக்கை கீழே போட்டார் அன்புமணி. தொடர்ந்து மைக்கை எடுத்துக் கொண்டு எழுந்த அன்புமணி தொண்டர்களைப் பார்த்து, ``சென்னை பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறேன்.

என்னை அங்கு வந்து சந்திக்கலாம்” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ``மீண்டும் சொல்கிறேன் உங்கள் மாநில இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன்தான்” என்றார். அதையடுத்து, பனையூர் செல்போன் எண்ணை அறிவித்த அன்புமணி, ``இந்த எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்” என்றார். அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், ``உங்களை இன்னொரு அலுவலகம் திறந்து கொள்ளுங்கள், நடத்துங்கள் என்றுதானே கூறுகிறேன். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப் போகிறார். முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் உனக்கு விருப்பம் இல்லை என்றால்…” என்று கூறி தொண்டர்களை பார்த்தார் ராமதாஸ்.
அப்போது, ``கட்சியை விட்டுப் போகலாம்” என்று தொண்டர்கள் கூற, ``அவ்வளவுதான்’ என்ற ராமதாஸ், ``நான் ஆரம்பித்த கட்சி இது. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள். யாராக இருந்தாலும்” என்றார்.
அதையடுத்து அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினார் அன்புமணி. இந்த மோதலின் பின்னணி குறித்து பா.ம.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``அன்புமணியின் உடன் பிறந்த அக்கா ஸ்ரீகாந்தியின் மகன்தான் முகுந்தன் பரசுராமன். மாநில இளைஞரணி பதவியை அவருக்கு வழங்குவதற்காகத்தான், சில மாதங்களுக்கு முன்பு அவரை கட்சியில் இணைக்க முடிவெடுத்தார் ராமதாஸ்.

ஆனால் அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. `ஏற்கெனவே குடும்பக் கட்சி என்று நம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் முகுந்தனை ஏன் கட்சிக்குள் அழைத்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் நிலவி வந்தது. இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவிப்பார் என்பதும், அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவருக்குமே தெரியும். முகுந்தனுக்கும் இது தெரியும். அதனால் தான் முகுந்தனை ராமதாஸ் மேடைக்கு வரும்படி அழைக்கும் போது அவர் அங்கு செல்லவில்லை” என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

