Manmohan Singh: `BMW வேண்டாமே- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சிங்கிற்கான சிறப்பு பாதுகாப்பு படையில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரியுமான அசிம் அருண் தனது எக்ஸ் பக்கத்தில் மன்மோகன் சிங் குறித்து குறிப்பிட்டிருப்பதாவது, "2004-ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மன்மோகன் சிங்கின் பாதுகாவலராக பணியாற்றினேன். அப்போது பிரதமராக இருந்த அவரின் உள் பாதுகாப்பு வளையத்தின் தலைவராக (AIG CPT) பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

மன்மோகன் சிங்குடன் அசிம் அருண்

அந்த வேலையை பொறுத்தவரை, பிரதமரை விட்டு நகரவே முடியாது. எதாவது ஒரு சூழலில் ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி தான் பிரதமருடன் இருக்க முடியும் என்றால், AIG CPT தான் அந்தப் பாதுகாவலராக இருப்பார். அந்த மாதிரியான சூழல்களில், அவருக்கு நிழல் போல இருக்க வேண்டுமென்பது என் கடமை.

மாருதி 800 - இந்த ஒரே ஒரு காரைத் தான் அவர் சொந்தமாக வைத்திருந்தார். இந்தக் கார் பிரதமர் இல்லத்தின் பளபளப்பான கருப்பு பி.எம்.டபிள்யூவிற்கு பின்னால் நிறுத்தப்பட்டிருக்கும்.

அவர் என்னிடம் அடிக்கடி, எனக்கு இந்த காரில் (பி.எம்.டபிள்யூ) செல்ல விருப்பமில்லை. இது தான் என் கார் (மாருதி 800) என்பார். அதற்கு அவரிடம் நான், இந்தக் காரை (பி.எம்.டபிள்யூ) ஆடம்பரத்திற்காக பயன்படுத்தவில்லை...பாதுகாப்பிற்காகத் தான் பயன்படுத்துகிறோம் என்று விளக்குவேன். ஆனால், எப்போது கான்வாய் (பி.எம்.டபிள்யூ) எடுக்கபட்டாலும், அதன் பின் நிற்கும் மாருதி 800-ஐ மனநிறைவுடன் பார்ப்பார். அது அவருடைய மிடில் கிளாஸ் மனநிலையையும், தன்னுடைய பணி பொதுமக்கள் குறித்து நினைப்பதும் என்ற அவரது மனநிலையையும் காட்டும்.

அவர் சொல்லும்போது, பி.எம்.டபிள்யூ என்பது பிரதமரின் கார்; ஆனால், மாருதி என்னுடைய கார் என்று கூறுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.