Sunita Williams: `8 நாள், 8 மாதமாகி விட்டது எப்போது திரும்புவார்கள்?- மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
ஜூலை 5, 2024.
எட்டு நாள் பயணமாக ஸ்டார் லைனர் என்னும் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 7 பேர் விண்வெளிக்குச் சென்றனர். ஆனால், விண்கலனில் ஏற்பட்ட கோளாறினால், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்னும் பூமிக்கு திரும்பவில்லை. இதனால், 8 நாள் பயணம் என்பது கிட்டதட்ட 8 மாதப் பயணமாக மாறியுள்ளது. ஆம்...ஸ்பெக்ஸ் எக்ஸ் விண்கலமான Crew Dragon 9 விண்கலனில் வரும் பிப்ரவரி மாதம் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப இருக்கிறார்.
To everyone on Earth, Merry Christmas from our @NASA_Astronauts aboard the International @Space_Station. pic.twitter.com/GoOZjXJYLP
— NASA (@NASA) December 23, 2024
இந்த நிலையில், இன்று சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை நாசா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் கீழ், அவர்களை சீக்கிரம் பூமிக்கு அழைத்து வாருங்கள் என்ற கமெண்டுகள் எகிறி வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் பயணம் பற்றி முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார்...
"அமெரிக்கா நிலாவிற்கு மனிதர்களைத் திரும்ப அனுப்பும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, போயிங் நிறுவனம் முதலில் ஆளில்லா விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பி பரிசோதித்து பார்த்தது. அது வெற்றி பெறவே, அவர்களின் விண்கலத்தில் மனிதர்களை அனுப்பியது. அதில் தான் சுனிதா வில்லியம்ஸும் பயணம் செய்தார். அவருடன் வேறு ஒருவரும் சென்றிருக்கிறார்.
மூன்று விண்கலன்கள்
நாசா, சில ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களின் விண்பயணத்திற்கான ஷட்டில் விண்வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்தி விட்டது. அதன் பின்னர், அது விண்வெளி பயணங்களுக்கு ரஷ்ய விண்கலன்கள் மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலன்களையும் பயன்படுத்தி வந்தது.
தற்போது, மூன்றாவது கலனாக போயிங் நிறுவனத்தின் விண்கலத்தை மனிதப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்ற திட்டத்திற்கு, அந்த நிறுவனத்தின் விண்கலனான ஸ்டார் லைனர் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு சோதனை சார்ந்த திட்டம் என்பது கவனத்திற்குரியது.
கவுண்டவுனின் போது...
இந்தத் திட்டத்தின் ஆரம்பத்திலேயே சில முறை ஸ்டார் லைனர் விண்கலனில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒருமுறை கவுண்டவுனின் போது கோளாறு ஏற்பட்டு, விண்வெளி வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆக, அனைத்து கோளாறுகளும் சரி செய்தப்பின்னர் தான், விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
பயணத்தின் ஆரம்பத்தில் நன்றாக இருந்த விண்கலன், பாதிக்கு மேல் கோளாறாகி உள்ளது. பின்னர் அது பெரும் முயற்சிக்குப் பின் விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது.

ரிஸ்க் வேண்டாம்!
விண்கலன் கோளாறை விண்வெளியிலேயே சரி செய்ய நாசா முயன்றது. ஆனால் முடியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் விண்கலன் மட்டும் மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியது. ஆனால், அதில் விண்வெளி வீரர்கள் திரும்பி வரவில்லை. காரணம், விண்வெளி வீரர்கள் விஷயத்தில் நாசா ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
காலண்டர் பாதிப்பு...
இனி வரும் பிப்ரவரி மாதம் ஸ்பெஸ் எக்ஸ் விண்கலன் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர். அதற்கிடையிலேயே நிறைய விண்கலன்கள் விண்வெளிக்கும், பூமிக்கு சென்று வந்துகொண்டு இருந்தாலும், விண்கலன்களுக்கென ஒரு காலண்டர் உண்டு. அந்தக் காலண்டரில் எந்த விண்கலன்கள் எப்போது விண்வெளிக்கு செல்லும், எப்போது பூமிக்கு திரும்பி வரும், யாரெல்லாம் செல்வார்கள் என்ற அட்டவணை இருக்கும். அதனால், அந்த அட்டவணை எதுவும் பாதிக்காத வண்ணம் செயல்கள் நடை பெறுகின்றன. அதன் படி சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே இருந்த ஏழு பேரில் இருவர் திரும்ப பூமிக்கு வந்துள்ளார்கள். அடுத்து, பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் குழு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறார்கள்?
விண்வெளி வீரர்கள் எடுத்த உடனேயே விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள். அதற்கென தனிப்பயிற்சிகள் கொடுக்கப்படும். விண்வெளியில் கூட, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்படி பார்த்தால், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் அனைவரும் பயிற்சி பெற்றவர்களே.
அதிலும் முக்கியமாக இந்தப் பயணத்திற்கு முன்பே விண்வெளிப் பயணத்தில் மிகுந்த அனுபவம் பெற்றவர் சுனிதா வில்லியஸ். முன்னர் ஒரு பயணத்தில் அதிகபட்சமாக 192 நாள்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார். விண்வெளியில் அதிக முறையும், அதிக நேரமும் நடந்தவர், முதன் முதலில் விண்வெளியில் மராத்தான் ஓட்டம் ஒடியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக விண்வெளியில் உள்ள தற்போதைய எழுவர் குழுவின் தலைவர் அவர்தான். அதனால், விண்வெளி சூழல் அவர்களுக்கு நன்கு பழகியிருக்கும். அதனால், அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது நலமாகவே இருப்பார்கள்.

இந்தியா – மனிதப் பயணத்திற்கான விண்கலம்?!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் மனிதர்களின் பயணத்திற்கேற்ற விண்கலன்களை செயல்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. ஆனால், அதற்கான பணிகள் போய் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஆளில்லாத ரொபோட்டிக் விண்கலன் இந்தியா சார்பாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, 3 - 4 ஆண்டுகளுக்கு பின்னர், ககன்யான் திட்டம் அதாவது விண்கலத்தில் மனிதர்களை ஏற்றி செல்லும் திட்டம் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரும்" என்று விளக்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


