முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `முந்திரிக்காடு ஏலமும் பழிக்குப்பழி மோதலும்’ | அத்தியாயம் 10
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், விடுதலை பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
கிட்டத்தட்ட கொள்ளைக் கூட்ட பாஸ்களாகவே தங்களை மகுடம் சூட்டிக்கொண்ட இளவரசனுக்கும் ராமசாமிக்கும் மோதல் க்ளைமாக்ஸை நெருங்க ஆரம்பித்தது. இதில் ராமசாமிக்கு வல்லம் கிராமத்தில் இருந்த செல்வாக்குதான் இளவரசனுக்கு தாங்க மாட்டாத எரிச்சல் கிளப்பியது. காரணம், இளவரசனுக்கு சொந்த ஊர் வல்லம். ராமசாமிக்கு அது பெண் எடுத்த ஊர். இருந்தாலும் ஊரில் பாதிப் பேர் ராமசாமிக்கு சப்போர்ட். இந்த இருவரின் மோதலில் ஊரே இரண்டாகப் பிரிந்து நின்றது. போலீஸ் ஸ்டேஷன்தான் ஊரின் மையப்புள்ளி. தெற்கில் உள்ள வீடுகள் இளவரசன் ஏரியா, வடக்கே உள்ளது ராமசாமி ஏரியா! அடிக்கடி தன் ஆதரவாளர்களோடு வல்லம் வரும் ராமசாமி தான் வரும்போது தங்கவும், தன் ஆட்களுக்கு உபயோகப்படும் என்றும் படிப்பகம் ஒன்றைக் கட்டினார்.
இதன் கட்டுமானப் பணி பாதியிலிருக்கும்போது, " இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட ஆள் இப்படி ஒரு படிப்பகம் கட்டக் கூடாது " என்று இளவரசன் தடுத்து நிறுத்திவிட்டார். இதன்பின் நீறுபூத்த நெருப்பாய் இருந்த மோதல் வெளிப்படையாக வெடித்தது, முந்திரிக்காடு ஏலத்தில்தான். அரசுக்கு சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் முந்திரிக்காடு ஒவ்வொரு வருடமும் முந்திரிக்கொட்டை பறிக்க ஏலம் விடப்படும். சில தனிநபர்கள்தான் இதை ஏலம் எடுப்பார்கள். ஆனால், தமிழ்நாடு விடுதலைப்படைக்கு விதை போட்ட வல்லம் கிராமத்தில் மட்டும் நிலைமை வேறு.
முந்திரி சேகரிப்போர் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் இளவரசன் ஆதரவாளர்கள் வைத்திருந்த சங்கம்தான் இந்த ஊர் எல்லைக்குள் வரும் 144 ஏக்கர் முந்திரிக்காட்டையும் ஏலம் எடுக்கும். தமிழ்நாடு விடுதலைப்படையின் தற்போதைய அனுதாபிகள், இருபது வருடங்களுக்கு முன்பே கோர்ட்டில் வழக்குப் போட்டு அந்தக் கிராமத்து மக்களுக்குப் பெற்றுத் தந்த உரிமை இது. ஆனால், காலப்போக்கில் இந்தச் சங்கத்தின் மூலம் எல்லாக் குடும்பங்களும் பயன்பெறும் நிலையிலிருந்து மாறி, ஒரு சிலர் மட்டுமே கிடைக்கும் லாபத்தை பங்கு போட்டுக் கொண்டனர். ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் இந்தத் தோப்பை இவர்கள் ஏலம் எடுப்பது வெறும் சில ஆயிரங்களுக்குதான்! 97 - ம் ஆண்டுக்கான ஏலத்துக்கு ஏற்பாடுகள் துவங்கியபோது, சங்கம் மூலம் ஏலம் எடுத்து ஒரு சிலர் மட்டும் பலனை அனுபவித்தது போதும். இம்முறை எல்லா மக்களும் பயன்படுகிற மாதிரி ஏலம் எடுக்க வேண்டும். இயக்கம் ஏலம் எடுக்கக் கூடாது என்று கொடிபிடித்தார் ராமசாமி.
இயக்கத்து ஆட்களும் இவர் ஆட்களும் மாறி மாறி நோட்டீஸ் போட்டுத் திட்டிக் கொண்டனர். கடைசியில் ஏலம் எடுத்ததென்னவோ இளவரசன் ஆதரவு பெற்ற இயக்கம்தான். எல்லாம் முடிந்தது... இவ்வளவு தூரம் வந்துட்ட பிறகு இனிமேலும் ராமசாமியை விடக்கூடாது. முதல்ல அவன் இந்த ஊருக்குள்ளே வரவிடாம பண்ணனும். அப்பதான் நாம பிரச்னையில்லாம இருக்க முடியும் என்று இளவரசனுக்கு அவரது ஆட்கள் தூபம் போட்டனர். " இவ்வளவு தூரம் அவன் இங்கே வந்து நம்மோட மோதறதுக்கு காரணமே நம்ம ஊர் தர்மராஜாதான். அவன்தான் ராமசாமிக்கு தளபதி மாதிரி. அவனைத் தீர்த்துக்கட்டினா போதும். அப்புறம் ராமசாமி நம்ம வம்புக்கே வரமாட்டான் " இளவரசனுக்குப் பக்கத்திலிருந்த ஆள் சொல்ல, இளவரசன் ஏதும் பேசவில்லை. " அவர்கிட்டே என்ன சொல்றது? நாமே செய்து காட்டிட்டு வருவோம். கிளம்புங்க தோழர் " என்று எல்லோரும் கிளம்ப, இளவரசன் அவர்களைத் தடுக்கவுமில்லை. 1997 ஜூன் மூன்றாம் தேதி..... இலைகள் லேசாய் அதிரும் அளவுகூட காற்றடிக்காத இரவு. வெக்கையான சூழல் வியர்வையைக் கிளப்ப, வீட்டுத் தரையும் சூடாய் இருக்க, வல்லம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே இருக்கும் அம்மன் கோயில் வாசலில் கட்டாந்தரையில் தூங்கிக் கொண்டிருந்தார் தர்மராஜா. நள்ளிரவு தாண்டிய நிலையில், ஒரு வேன் ஜெயங்கொண்டம் ரோட்டில் வந்து கோயில் அருகே திரும்பி ஆண்டிமடம் ரோட்டில் நின்றது. தூரத்திலேயே விளக்குகளை லோ அணைத்துவிட்டு ஊர்ந்து வந்த வேனில் ஆறு பேர் இருந்தனர்.
சத்தம் காட்டாமல் கதவைத் திறந்து கீழே இறங்கி, பூனை போல் நடந்து தர்மராஜா அருகே வந்தனர். தர்மராஜாவின் வாயில் ஒரு துண்டைப் போட்டு ஒருவன் அழுத்தி அவரைச் சத்தம் போட முடியாமல் பண்ண, திமிறித் தூக்கம் கலைந்த அவரைக் கையைக் காலை இறுக்கிப் பிடித்துக் குண்டுக்கட்டாய் தூக்கிப் போய் வேனில் திணித்தனர் மற்ற ஐந்து பேரும். அடுத்த நொடியே வேனின் இன்ஜின் உயிர்பெற, வண்டி கிளம்பி வேகமெடுத்தது.
பொழுது விடிந்தும் விடியாத அதிகாலையிலேயே ராமசாமியைத் தேடிவந்தார், தர்மராஜாவின் அண்ணன் விஸ்வநாதன். முகத்தில் பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது. " ராத்திரி ஒரு வேன் வந்து போனதா சொல்றாங்க. தம்பியைக் காணோம். மேலத்தெரு பசங்க ஏதாவது பண்ணிட்டானுங்களோன்னு எனக்கு பயமா இருக்கு.. " விஸ்வநாதன் அழுதே விட்டார். மேலத்தெரு என்று அவர் குறிப்பிட்டது, இளவரசன் ஏரியாவைதான். ராமசாமிக்கும் அந்தச் சந்தேகம் எழுந்தாலும்கூட, அதை வெளிக்காட்டவில்லை. பதட்டமாய் இருக்கும் விஸ்வநாதனை மேலும் பயமுறுத்த வேண்டாம் என முடிவு செய்து அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்பினார். விஸ்வநாதன் கிளம்பிப் போனதும் ஒரு நொடிகூட தாமதிக்கவில்லை ராமசாமி. விழுப்பனங்குறிச்சிக்குப் போய் சின்னத்தம்பியைக் கூட்டி வந்தார். ராமசாமியின் வலதுகரம் சின்னத்தம்பி. " தர்மராஜாவை இளவரசன் ஆளுங்கதான் கடத்திக்கிட்டுப் போயிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.
உடனே போய் இளவரசனைப் பாரு. ஒழுங்கு மரியாதையா தர்மராஜாவை விட்டுடச் சொல்லு. இல்லைனா, அப்புறம் நாம சும்மா இருக்க மாட்டோம்னு சொல்லிட்டு வா! " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சூரியன் உச்சிக்கு வருவதற்குள் தகவல் ராமசாமி கோஷ்டியிலுள்ள எல்லாருக்குமே தெரிந்துவிட்டது. பலரும் பதட்டத்தோடு வந்து ராமசாமியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே இளவரசனிடம் பேச்சுவார்த்தைக்குப் போன சின்னத்தம்பியின் வருகைக்காக காத்திருந்தார்கள். பொழுது சாயும் நேரத்தில் சோர்ந்துபோய் வந்தார் சின்னத்தம்பி.
“ தைரியமிருந்தா ராமசாமியை வரச சொல்லு.... அவங்ககிட்டே பேசிக்கறேன்னு இளவரசன் சொல்றான்! " என்பதை மட்டும் சொன்னார் சின்னத்தம்பி. கோபம் தலைக்கேறிவிட்டது ராமசாமிக்கு! ஆதிமூலம் என்பவரை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினார். ஆண்டிமடம் கொடுக்கூர் ரோட்டிலிருந்து வல்லம் கிராமப்பாதை திரும்பும் முக்கூட்டில் நின்று கொண்டு, ஆதிமூலத்தை இளவரசனிடம் அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் பரிவாரங்களோடு இளவரசன் வந்தார். தார்பூசின மாதிரி அப்படி ஒரு இருட்டு.... ஒருவர் சிகரெட் பற்ற வைக்க உரசிய தீக்குச்சி வெளிச்சத்தில், ராமசாமியின் கண்கள் சிவந்திருப்பது தெரிந்தது. “ எங்கேடா வெச்சிருக்கீங்க தர்மராஜாவை? மரியாதையா அவனை ராத்திரிக்குள்ளே கொண்டுவந்து விட்டுருங்க... என்னோட மோதற அளவு தைரியமிருந்தா நேரா எங்கிட்டே வாங்க. மோதிப் பார்த்துடலாம். அதை விட்டுட்டுத் தூங்கறவனையெல்லாம் தூக்கிட்டுப் போற கேவலத்துல இறங்காதீங்க!"
- கோபமாய் பெருங்குரலில் ராமசாமி கத்தியதைச் சுற்றியிருந்த முந்திரிக்காடுகள் எதிரொலித்தன. " டேய்! சும்மா கத்தாதே... யாரையும் கடத்திக்கிட்டு போற அளவு நாங்க வேலையில்லாம இல்லை... ஒரு கொள்கையோடவும் லட்சியத்தோடவும்தான் செயல்பட்டுக்கிட்டிருக்கோம். இந்த அமைப்பை உருவாக்கின தமிழரசனையே விமரிசினம் பண்ற அளவுக்கு அறிவாளி ஆயிட்டே நீ.... தர்மராஜா போனஇடத்தை மட்டும் உன்னால கண்டுபிடிக்க முடியலையா? "

எதிர்த்தரப்பிலிருந்து நக்கலாகக் குரல் வந்தது. ராமசாமியின் கோபம் இன்னும் எகிறியது. " இங்கே பாருங்க... எனக்குன்னு ஒரு வழி ஏற்படுத்திக்கிட்டு, அதுல நான் போறேன். நமக்குள்ளே பங்காளிச் சண்டை வேண்டாமேன்னு பார்க்கிறேன். உனகூட இருக்கற பாதிபேர் அரிவாள் தூக்க எங்கிட்டதான் கத்துக்கிட்டானுங்க. அவனுங்களுக்கு எதிரா அரிவாள தூக்க எனக்கு மனசு வரலை. இப்படியெல்லாம் இருக்க வேண்டாம்... மோதிப் பார்த்துடலாம்னு சொல்றீங்களா? இந்த செம்மண் பூமியிலேயே நாம அத்தனை பேரும் ரத்தம் கொட்டி செத்துப் போயிடலாம்னு சொல்றீங்களா? நான் ரெடி. தேதி குறிச்சிட்டு சொல்லி அனுப்புங்க... வர்றேன்! ஆனா, அதுக்கு முன்னால ஆம்பளைத்தனமா ஒப்புக்கிடுங்க... எங்கே தர்மராஜா? "
" அவன் எங்ககிட்டதான் இருக்கான். ஒரு சின்ன கணக்கு தீர்க்க வேண்டியிருக்கு... தீர்ந்ததும் பத்திரமா அனுப்பிடறோம்! " - பதில் வந்தது.
. " என்னடா கணக்கு? "
எங்க பேரை வெச்சி அவன் சம்பாதிச்சது, நியாயப்படி எங்களுக்குத்தானே தரணும். அதையெல்லாம் வாங்கிட்டுத் திருப்பி அனுப்பிடறோம்! " அப்படி எதுவும் அவன் சம்பாதிக்கலை! " " அதையெல்லாம் நீ சொல்லாதே ராமசாமி. அவன்கிட்டே கேட்டுக்கிட்டு இருக்கோம். அவன் பதில் சொல்லிக்கிட்டிருக்கான். இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. நாலு நாள் கழிச்சி வந்து கூட்டிக்கிட்டு போ. "
" இதுதான் முடிவான பதிலா? "
" ஆமாம். அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நல்ல சாப்பாடுதான் போடறோம். ஒண்ணும் செத்துடமாட்டான்.
ராமசாமி கிளம்பிவிட்டார். அடுத்த நான்கு நாட்கள் ஆலோசனைகளில் கழிந்தன. “ இனிமேல் இந்த இளவரசனை விட்டு வைக்கக் கூடாது தோழர். அவனைப் போட்டுத் தள்ளிட்டாதான் அந்தக் கும்பலே அடங்கும் அவனுங்களை விட்டு வெச்சா, நம்மளைத் தீர்த்திடுவானுங்க போல இருக்கு. அதுக்காகத் திட்டமெல்லாம் போடறதா அரசல் புரசலா பேச்சிருக்கு. எதுக்கு நாம காத்திருக்கணும்? நாம முந்திக்கிட்டு அவனுங்களைக் காலி பண்ணிடணும். நீங்க வரணும்னுகூட அவசியமில்லை.... ஒரு வார்த்தை சொல்லுங்க, போதும். நாங்க போய் தீர்த்துட்டு வந்துடறோம் " என்று படபடத்தார்கள் சின்னத்தம்பியும் ஆதிமூலமும். ராமசாமி யோசித்துக் கொண்டிருந்தார்...
- மேலும் சலசலக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


