திருவாரூர்: `கலைஞர் ஐயா கொடுத்த வீடு; எப்ப இடிஞ்சு விழும்னு தெரியல... - அழகிரி நகர் மக்கள் அச்சம்!

திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலைய பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது அழகிரி நகர். நகரின் மையப் பகுதியில் 1976-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வீடற்றோருக்கு 110 வீடுகள் வழங்கப்பட்டது. தற்போது அந்த வீடுகளின் நிலைமை மோசமடைந்துள்ளது. அந்த வீடுகளின் மேற்கூரை கம்பிகள் வெளியே தெரியும்படியாகவும், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும்படியாகவும், ஆங்காங்கே தண்ணீர் கசிவதுமாகவும் இருந்து வருகிறது. இதில் சில வீடுகளின் மேற்கூரை படுதாவினை கொண்டு மூடி வைத்துள்ளனர். எந்த வித அசம்பாவிதமும் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அக்குடியிருப்பு வாசிகளிடம் பேசினோம். "ஆரம்பத்துல இங்க இவ்வளவு வீடுகள் கிடையாது. வத்திப்பெட்டி அளவுல சின்னச்சின்ன குடிசையா தங்கி இருந்தோம். கலைஞரு பெரிய ஸ்கூல்ல படிச்சப்போ இந்த தெருவுக்கு வந்து போவாரு, அவரு நீச்சல் பழகுனதே இந்த ஓடம்போக்கி ஆத்துல தான்.

இன்னும் சொல்லப்போனா இது முதல்ல அழகிரி நகர் கிடையாது. கலைஞர் அரசியல்ல தல காட்டினப்ப இந்த தெரு பேர பட்டுக்கோட்டை அழகிரி பேரக் கொண்டு அழகிரி நகர்ன்னு மாத்துனாரு. கலைஞரு திருவாரூர் வாரப்பெல்லாம் இங்க உள்ள சனங்களோட மால, மரியாதைய ஏத்துதான் செல்வாரு. அந்த அளவுக்கு நெருக்கம் உண்டு இந்தப் பகுதிக்கும் கலைஞருக்கும்... எங்க நெலமைய அறிஞ்ச கலைஞரு 76ல 110 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அப்புறம் அடுத்தடுத்த ஆட்சியில இங்க எல்லாம் காலனி வீடா மாறிடிச்சி. இப்போ இந்த வீடுங்க எல்லாம் பழசா போயிட்டு... தூங்குறப்போ மேல இருந்து தண்ணியா சொட்டுது, சில சமயத்துல மேலருந்து தொப்பு தொப்புன்னு சிமென்ட் பூச்சுங்க பேந்து விழுவுது. இது மட்டுமல்லாம மழை நேரத்துல இங்க உள்ள முக்காவாசி வீடுங்க உள்ள குளம்போல தண்ணி தேங்கிரும். தண்ணிய மொரத்தால வாரி ஊத்திட்டு, சாக்குத் துணியை விரிச்சு போட்டும், கட்டில் மேல ஏறியும் படுத்துப்போம்.

இதுனால காலெல்லாம் சேத்து புண்ணு வச்சி ஒரு அடி எடுத்து வைக்கவே முடியாது. நைட்டு படுக்கிறப்போ விடிஞ்சு எழுந்திருப்போமாங்கிற பயத்திலேயே கண்ணு அசர வேண்டியதா இருக்கு. நாங்க வாழ்ந்துட்டோம், எங்க பேர புள்ளைங்க இன்னும் பள்ளிக்கூடத்தையே தாண்டல.

இன்னும் சொல்லப்போனா எந்த கலைஞர் ஐயாவால வீடு கெடச்சு, நிம்மதியா கண்ணு அசைந்தோமோ, அதே வீட்டுலயே நிம்மதி கெட்டுப் போய் வாழ்ந்துட்டு வரோம்... இதுவரையிலும் எந்த அதிகாரிமார்களும் வந்து பார்க்கல இந்த வீடுகளுக்கு நல்ல வழி காட்ட அரசுதான் முன் வரணும்" என்று கூறினார்கள்.

இது குறித்துப் பேச நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவரிடம் பேச முடியவில்லை. அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டோம்.

``இது சம்பந்தமாக எனது கவனத்திற்கு எதுவும் வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு அந்தப் பகுதியின் தொகுப்பு வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு நல்ல முடிவை அரசு எடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அக்குடியிருப்புவாசிகள் முன்வைத்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.