`நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?’ - முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்

கோவை திமுக முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மோகன். இவர் கட்சியிலும் மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே கடந்த 10ம் தேதி மோகன் உயிரிழந்தார்.

மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை சுங்கம் பகுதியில் உள்ள மோகன் வீட்டுக்கு சென்று அவரின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மோகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், “மோகன் கோவை மாவட்டத்தில் திமுக-வின் தூணாக விளங்கியவர். அவரின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தியுள்ளேன்.

மு.க. ஸ்டாலின்

பணிகள் வேகமாகவும், உற்சாகமாகவும் நடைபெற்று வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலில் 200 என்ற இலக்கை வைத்திருந்தோம். ஈரோடு கள ஆய்வுக்கு பிறகு 2026 சட்டசபை தேர்தலில் 200 என்ற எண்ணிக்கை கடந்து கூடுதலாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அவர் மீதான வழக்கை அவர் சட்டப்படி எதிர்கொள்வார். ஈரோடு கிழக்குத் தொகுதி மீண்டும் இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்தாலோசித்து முடிவு செய்வோம். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான சட்டம்.” என்றார்.

விஜய்

அப்போது ஸ்டாலினிடம், “நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்.” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நன்றாக பார்க்கிறேன்” என்று சிரித்தபடி பதிலளித்து சென்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.