கைத்தொழில்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

தமிழ் இலக்கியத்தில் முதுகலை படித்த இளம் பெண் வேலைக் கிடைக்காத விரக்தியில் துவண்டுப் போகாமல், சாதுர்யமாக வாழ்க்கையில் முன்னேறுகிறார். 

 சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் பணிக்கான ஆட்கள் தேர்வு அன்று நடைபெற்று கொண்டது. 10 மணி அளவில் அங்கு உட்கார்ந்திருந்த 24 வயதுடைய பிரியாவின் பெயர் சொல்லி உதவியாளர் அழைத்தார். தன்னுடைய சான்றிதழ்கள் அடங்கிய கோப்புடன் பிரியா அறைக்குள் சென்றாள். தன்னை அழகுபடுத்தி கொள்வதில் பிரியாவிற்கு அதிக விருப்பம் உண்டு. 

அதனால் அவள், தனக்கேற்ற உடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்வதில் தொடங்கி, தனக்கு தேவையான சிறு சிறு அழகு பொருட்களையும் தானே செய்து கொள்வாள். ஒரு வெள்ளை நிற ஐஸ்கிரீம் மேல் சேலையை சுற்றி வைத்தது போல், பிரியாவின் உடலில் அந்த சிவப்பு நிற சேலை கச்சிதமாய் பொருந்தி இருந்தது. அவள் முகம் எல்.இ.டி. மின்விளக்கை ஒளிர விட்டது போல் பிரகாசமாய் இருந்தது. அறைக்குள் அமர்ந்திருந்த பள்ளி சேர்மன், முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தினாள். 

பள்ளி முதல்வர் பிரியாவின் கோப்பினை வாங்கி சான்றிதழ்கள் பார்த்தார். பின் அவளை பார்த்து, "ஏன் நீங்க தமிழ்ல பி.ஏ., எம்.ஏ., பி.எட்.  படிச்சு இருக்கீங்க" என்று கேட்டார்.

சித்தரிப்புப் படம்

 "எனக்கு தமிழ் பிடிக்கும் மேடம், அதனால தமிழ் படிச்சேன்" என்று பிரியா கூறியதும், "இது சி‌.பி.எஸ்.இ. ஸ்கூல் சோ இங்க அவ்வளவா தமிழுக்கு நாங்க இம்பார்ட்டன்ஸ் கொடுக்கல, ஆல்ரெடி 10 இயர் எக்ஸ்பிரியன்ஸ் டீச்சர் ஒருத்தவங்கள செலைக்ட் பன்னி வைச்சி இருக்கோம். உங்களுக்கு எக்ஸ்பிரியனசும் இல்ல, அதனால நீங்க இப்போதைக்கு ரிசியூம் கொடுத்துட்டு போங்க, ஆப்பர்சினியூட்டி இருந்தா சொல்லுறோம்" என்று முதல்வர் கூறினார். பிரியா தலை அசைத்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள். 

 பேருந்தில்  அமர்ந்திருந்த பிரியாவின் நினைவில், கல்லூரி முடித்த பின், அவள் பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தாள்.

தமிழ் பாடம் என்பதாலும், அனுபவம் இல்லை என்பதாலும் இதுவரை அவளுக்கு எங்கும் ஆசிரியர் பணி‌ கிடைக்கவில்லை. அவள் பெரும் விருப்பத்துடன் படித்த தமிழ், அவளுக்கு பிடித்த ஆசிரியர் பணியை பெற்று தரவில்லை என்ற வருத்தம் அவளுக்குள் எழுந்தது. பேருந்து அவள் இறங்க வேண்டிய இடத்தில் நின்றதும், அவள் இறங்கி சிறிது தூரம் நடந்தே வீட்டிற்குள் நுழைந்தாள்.

சித்தரிப்புப் படம்

அவளது அப்பா சோஃபாவில் அமர்ந்து கொண்டு, "இது என்னஎழவுனே புரிய மாட்டுது, எப்ப பார்த்தாலும் டோங் டோங் னு சவுண்ட் வந்துட்டே இருக்கே" என்று தனது கையில் இருந்த கைப்பேசியை வைத்து புலம்பி கொண்டிருந்தார்.

தேநீர் கோப்பையுடன் வந்த பிரியாவின் அம்மா, அவளை பார்த்து "என்ன ஆச்சு டி இன்டர்வியூ" என்று கேட்க, "வேலை கிடைக்கல" என்று கூறிவிட்டு பிரியா தன் அறைக்குள் சென்றாள். கையில் கைப்பேசியை வைத்து கொண்டு, பிரியா செல்வதை பார்த்த, அவளின் அப்பாவிடம், "டீ எடுத்துக்கொங்க, உங்களுக்கு வேற வேலை இல்ல, இந்த டச் போனா வாங்கி வைச்சிட்டு, தினமும் ஏதாவது குறை சொல்லிட்டு இருக்கீங்க, நமக்கு எதுக்கு இதெல்லாம்" என்று அவர் கேட்டிட, "உன் வேலைய பாரு டி, எனக்கு கீழ வேலை செய்யுற‌ பசங்களாம் டச் போன் வைச்சு இருக்கானுங்க, நான் வைச்சிருக்க கூடாதா" என்று கூறியபடி தேநீரை எடுத்து குடித்தார்‌.

வாடிய மலராய் அறைக்குள் அமர்ந்திருந்த பிரியாவின் கைப்பேசிக்கு இணைய செயலியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அவள் கைப்பேசியை எடுத்து பார்க்கையில் கடைசியாக பதிவிட்ட கவிதைக்கு அன்பு என்பவர் விருப்பம் தெரிவித்திருப்பதை அறிந்தாள். அவளுக்கு தமிழின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாய் இணையத்தில் அவள் தன்னுடைய படைப்புகளை எழுதி வருகிறாள். 

அதில் அவளுக்கு கிடைக்கும் பாராட்டுகளே, தமிழை பற்றி அவள் தேடி தேடி அறிந்து கொள்ளும் எண்ணத்தை தருகிறது. அந்த குறுஞ்செய்தி அவளுக்கு புத்துணர்ச்சியை தந்தது. பின் அறையில் பாதி பக்கங்களை படித்து விட்டு வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மீதமுள்ள பக்கங்களை வாசித்தாள். 

சித்தரிப்புப் படம்

வீட்டு தோட்டத்தில் உள்ள செடியின் அனுமதியின்றியே அது தரும் பூவினை பறித்து விடுகிறார்கள், அதை நட்டு பாதுகாத்தவர்கள். அதுபோல் அன்று இரவு உணவு சாப்பிட்ட பிரியாவின் அப்பா, "நாளைக்கு பிரியாவ பொண்ணு பார்க்க வராங்க, ரெடியா இருங்க" என்று கூறினார். 

"என்னங்க திடீர்னு சொல்லுறீங்க" என்று அவளது அம்மா கேட்டிட, "நம்ப உறவுக்கார பையன்தான், சாப்டர் இன்ஜினியரா சென்னையில வேலை பாக்குறானாம், அவங்க அப்பாகிட்ட சீர் செய்யுறது பத்தியெல்லாம் பேசி முடிச்சிட்டேன். நாளைக்கு நேர்ல பையனும் பொண்ணும் பாத்துக்கிட்டா நல்லா இருக்கும்னு அவங்க ஆசைபடுறாங்க, அதான் வர சொல்லிட்டேன்" என்று கூறினார்.

 "ஏங்க பிரியாவுக்கு வேலைக்கு போகனும்னு ஆசை இருக்கு, அதுக்குதான் அவ படிச்சு இருக்கா" என்று அவளது அம்மா கூற, "கல்யாணம் ஆனதுக்கு பிறகு அவ அங்க போய் வேலைக்கு போகட்டும், அதுக்கு அவங்க ஒத்துக்கிட்டாங்க" என்று அவர் கூறிவிட்டு, சாப்பிட்ட தட்டிலே கையை கழுவி விட்டு எழுந்தார். 

மழை மேகங்கள் கூடி, மின்னல் வந்து, இடி இடித்து மழை வருவதை போல் பிரியாவின் திருமண ஏற்பாடுகள், வேகவேகமாய் நடந்தன. பிரியாவின் அப்பா, "ஏன்டி நாளைக்கு மறுநாள் நல்ல நாளா இருக்கு போய் நகை எடுத்துட்டு வந்துருவோம், இப்போ பேங்க்ல இருக்குற பணத்தை எடுத்துட்டு வரேன், அந்த பேங்க் பாஸ் புக் எடுத்துட்டு வா" என்று தன் மனைவியிடம் கேட்டார்.

பிரியாவின் அம்மா வங்கி புத்தகத்தை துணி பையில் வைத்து, அவரிடம் கொடுத்தார்.  அதை எடுத்து கொண்டு வங்கிக்கு சென்ற அவர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி, வரிசையில் நின்று அதிகாரியிடம் கொடுத்தார்.

சித்தரிப்புப் படம்

அவரது வங்கி கணக்கு எண்ணை கணினியில் தட்டச்சு செய்த அதிகாரி அதை பார்த்து விட்டு, "சார், உங்க அக்கவுண்ட்ல பணமே இல்ல சார்" என்று கூறிட, "என்ன சார் சொல்லுறீங்க, என் பொண்ணு கல்யாணத்துக்கு நகை எடுக்க வைச்சிருந்த பணம் சார் அது நல்லா பாருங்க" என்று அவர் கூறிட, "சார் உண்மையிலே பணம் இல்ல சார், நீங்க வேணும்னா அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் எடுத்து பாருங்க" என்று கூறினார். 

அங்கிருந்த அதிகாரிகள் அவரது வங்கி புத்தகத்தை வைத்து கணினியில் பார்த்துவிட்டு, அவரது வங்கி கணக்கில் இருந்து சில நாட்களுக்கு முன் பல முறை பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவரது கைப்பேசியை எடுத்து பார்த்ததில் அதற்கான குறுஞ்செய்தியும் வந்துள்ளது.

அதை கவனிக்காமல் அவர் விட்டுள்ளார். இதனால் பணம் பறிபோனதை அவர் அறிய முடியவில்லை. பின் வேறு வழியின்றி சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை பதிவு செய்தார். 

கிராமங்களில் இதுபோன்ற செய்திகள் மின்சாரம் பாய்வது போல் வேகமாய் பரவி விடும். அவர் உயிரற்ற உடலாய் வீட்டிற்குள் நுழையும் போது, அவரது மனைவி அழுதபடி இருந்தார். அவளை பார்த்ததும் பானை உடைந்து நீர் கொட்டுவது போல் கதறி அழுதார். 

"இத்தனை வருச உழைப்பு போச்சே டி" என்று கத்தினார். அதை பார்த்த பிரியாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அப்போது அவரின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அழுகையை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்து கொண்டு அந்த அழைப்பை எடுத்த அவர், "சொல்லுங்க சம்மந்தி" என்றார். 

சித்தரிப்புப் படம்

"என்ன இன்னும் சம்மந்தினு கூப்பிடுறீங்க, நம்ப பேசுன படி இப்ப உங்களால நகை போட முடியுமா சொல்லுங்க, எனக்கு இனியும் உங்க கூட சம்மந்தம் வைச்சுக்க இஷ்டம் இல்ல, நீங்க வேற மாப்பிள்ளைய பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு கைப்பேசியை அணைத்தார். 

காதில் வைத்திருந்த கைப்பேசியை பிரியாவின் அப்பா எடுத்து தூக்கி எறிந்து, "என் பொண்ணு வாழ்க்கை இப்படியாகிடிச்சே" என்று மீண்டும் கதறி அழுதார். பெற்றோர் அழுவதை பார்த்த பிரியா, "எதுக்கு இப்போ அழுகிறீங்க, நீங்க தெரிஞ்ச ஆளுங்கள நம்பியும், தெரியாதவங்களாலும் ஏமாந்து இருக்கீங்க, இதனால என் வாழ்க்கை எதுவும் வீணாகல, நான் என்னைய பார்த்துப்பேன், என்னைய என் போக்குல விடுங்க" என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றாள். 

3 ஆண்டுகளுக்கு பிறகு, தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போல் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டின் சோஃபாவில் பிரியாவின் முன் ஒரு காதல் ஜோடி அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். 

அங்கு அமர்ந்திருந்த பெண் தனது கையில் உள்ள ஆல்பத்தில் ஒரு புகைப்படத்தை வைத்து "இந்த டிசைன்ல பன்னி கொடுத்துடுங்க மேடம்" என்று கூறினார். "ஓகே கண்டிப்பா பன்னிடலாம்" என்று பிரியா கூறிட, "இன்னும் டூ டேஸ்ல வேணும் மேடம், அதான் வீட்டுக்கே வந்து கொடுத்து இருக்கோம்" என்று அந்த பெண் கூறிட, சிரித்து கொண்டே பிரியா, "கண்டிப்பா ரெடி பன்னி தந்துடுறோம்" என்று கூறினார். 

அப்போது சமையல் அறையில் இருந்து மிதமான தாடி வைத்த இளைஞன், மூன்று‌‌ தம்பளரில் எலும்பிச்சை பழச்சாறு எடுத்து வந்து அங்கு அமர்ந்திருந்த மூவருக்கும் கொடுத்தான். 

"எடுத்துக்கோங்க" என்று பிரியா கூறியதோடு, "இது என் ஹஸ்பன்ட்தான்" என்று கூறினாள். அவர்களும்  தம்பளரை எடுத்து குடித்தனர். 

அப்போது அங்கிருந்த பெண் "மேடம் ஒரு டவுட், நீங்க ஃபேஷன் டிசைனிங் பன்னி உங்க ஷாப் பத்தி இன்ஸ்டால போஸ்ட் போடுறீங்க ஓகே, ஆனா இன்னொரு அக்கவுண்ட்ல கவிதைகளாம் எழுதி போடுறீங்க ஏன் மேடம்" என்று கேட்டிட, "எனக்கு தமிழ் புடிக்கும், அது மட்டுமில்லாம என்னைய ஃபேஷன் டிசைனர்னு சொல்லுறத விட ஒரு எழுத்தாளர்னு சொல்லுறதுதான் எனக்கு பிடிக்கும்" என்று பிரியா கூறினாள். 

அமர்ந்திருந்த இருவரும் புறப்பட்டு சென்றனர். "பிரியா வீட்டுல இருந்து உங்க அம்மா பேசுனாங்க, ஊர் திருவிழாவுக்கு வர சொல்லுறாங்க" என பிரியாவின் கணவன் கூறிட, "அன்னக்கி ஊருக்கு போறது கஷ்டம் தான், நெக்ஸ்ட் ஒரு ஷாப் ஒப்பன் பன்றது பத்தி அன்னக்கி ஒரு மீட்டிங் இருக்கு" என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றாள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.