Elon Musk: G - Mail க்கு மாற்றாக X - Mail - நெக்ஸ்ட் அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்

எலான் மஸ்க் எதையும் விட்டு வைப்பதாக இல்லை. எல்லாத் துறைகளிலும் கால் பதித்து தனது பிஸினஸை விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பிரசாரங்கள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல், செயற்கைக் கோள் என மும்முரமாக இருந்தவர், எலெக்ரிக் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டி டெஸ்லா நிறுவனத்தை ஆரம்பித்தார். சின்னச் சின்ன குளறுபடிகள் இருந்தாலும் ஆட்டோ பைலட் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்து வியக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

Elon Musk | எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தையும் விலைபேசி முடித்து அதை எக்ஸ் நிறுவனமாக மாற்றி நடத்தி வருகிறார். சரி தொழில் நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, கார் உற்பத்தி என நிறுத்திவிடுவார் என்று பார்த்தால் அரசியலிலும் தனது சேட்டைகளை ஆரம்பித்தார். ரஷ்யா - உக்ரைன் போர் சூழலிலும் உக்ரைனுக்கு ஆதரவாகப் பேசி சர்வதேச அரசியல் சர்ச்சைகளையும் செய்தார். இப்போது அமெரிக்க அரசியலில் எலான் ஆதரவாகப் பிரசாரம் செய்த ட்ரம்ப் அதிபராகிவிட்டார்.

அடுத்தடுத்து எலானிடமிருந்து என்னென்ன அறிவிப்புகள் வரப்போகிறது, என்னென்ன சேட்டைகள் செய்யப்போகிறார் என்பதைத்தான் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவ்வகையில் தற்போது, G Mail மென்பொருளுக்கு மாற்றாக X Mail மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Yes https://t.co/NEEdnWTK0o

— Elon Musk (@elonmusk) December 16, 2024

இது தொடர்பான சமூக வலைதளப் பதிவுகளை எலானே தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விரைவில் X mail அறிமுகமாகும். என்னுடைய செயல் திட்டங்களிள் இது ஒன்று என்று பதிவிட்டிருக்கிறார். அடுத்ததாக நீண்ட நாள்களாக எலான், ஐபோனுக்கு மாற்றாக புதிய போனையும் கொண்டு வரப்போவதாகக் கூறப்பட்டு வருகிறது. செல்போன் தயாரிப்பிலும் விரைவில் கால் பதிப்பார் என்று கூறிவருகின்றனர்.

எலான் ஏற்கெனவே குத்தாட்டாம் போட்டுக் கொண்டிருக்கிறார். போதாக் குறைக்கு காலில் சலங்கைக் கட்டி விட்டதுபோல, அவருக்கு ஆதரவான ட்ரம்ப் ஆட்சி அமெரிக்காவில்....இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ, எலான் இன்னும் என்னென்ன செயல் திட்டங்கள் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.