3 வயது மகன், இளம்பெண் மர்ம மரணம்; காதல் கணவனை தாக்கிய உறவினர்கள் - வேலூரில் அதிர்ச்சி

வேலூர் சத்துவாச்சாரி அருகிலுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரின் காதல் மனைவி நித்யஸ்ரீ என்கிற பிரியா (25).

இருவரும் அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் பயிலும்போது காதல் வயப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். மகளின் திருமண முடிவால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், மகள் தேர்ந்தெடுத்த நபர் குறித்தும், அவரின் குடும்பத்தினர் குறித்தும் விசாரித்திருக்கின்றனர். `மகளின் முடிவு சரியில்லை’ எனத் தெரியவந்தபோதும், மகளின் விருப்பத்துக்காக காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியதாக சொல்கிறார்கள். இதையடுத்து, காதல் தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். முதலில் பிறந்த குழந்தை ஏதோவொரு காரணத்திற்காக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக யோகேஸ்வரன் என்ற ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். யோகேஸ்வரனுக்கு தற்போது 3 வயதாகியிருந்தது.

3 வயது மகன், இளம்பெண் மர்ம மரணம்

இந்த நிலையில், யோகேஸ்வரனுக்குப் பிறகு இன்னொரு குழந்தைப் பிறந்ததாகவும், அந்த குழந்தையும் உடல்நலக்குறைவால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த துயர நிகழ்வுகளுக்கு இடையே யோகேஸ்வரனுக்கும் உடல்நலப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சொல்கின்றனர் உறவினர்கள்.

இந்த நிலையில்தான் காதல் மனைவி நித்யஸ்ரீ மீது வெறுப்படைந்த கணவன் நந்தகுமார் வேலைக்குச் செல்லாமல், மனைவியைத் தாக்கி வரதட்சணை கொடுமைச் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. மாமியாரும், நாத்தனாரும்கூட நித்யஸ்ரீயை வீட்டை விட்டு துரத்துவதிலேயே குறியாக இருந்ததாகவும் கொதிக்கின்றனர் உறவினர்கள்.

இந்த நிலையில்தான் நேற்று (டிசம்பர்-15) இரவு கணவனின் வீட்டில் இருந்த நித்யஸ்ரீயும், அவரின் 3 வயது மகன் யோகேஸ்வரனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். வீட்டின் அறைக்குள் இருந்த பஞ்சு மெத்தையில் சடலங்கள் கிடந்தது. இந்தச் சம்பவம் குறித்து சத்துவாச்சாரி வள்ளலார்ப் பகுதியில் வசித்து வரும் நித்யஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதபடியே சம்பவ இடத்துக்கு ஓடிவந்த குடும்பத்தினரும், உறவினர்களும் இரு சடலங்களையும் பார்த்த ஆத்திரத்தில் அங்கு இருந்த நித்யஸ்ரீயின் கணவன் நந்தகுமாரைக் கடுமையாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து விழுந்த நந்தகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சத்துவாச்சாரியில் உள்ள நலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். தாக்குதல் நடைபெற்ற வேளையில் நித்யஸ்ரீயின் மாமியாரும், நாத்தனாரும் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர் எங்கிறார்கள் அக்கம் பக்கத்தினர்.

போலீஸார்

இறந்து கிடந்த நித்யஸ்ரீயின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான வீக்கங்கள் காணப்படுகின்றன. எனவேதான் `நித்யஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம். குழந்தையை தலையணையால் முகத்தை அமுக்கி கொலைச் செய்திருக்கலாம்’ என சந்தேகிக்கின்றனர் உறவினர்கள். ஒருவேளை கணவன் குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல், குழந்தையை கொன்றுவிட்டு நித்யஸ்ரீ தற்கொலைச் செய்துகொண்டாரா என்கிற சந்தேகமும் ஏற்படுகிறது. ஆனால், தூக்கில் தொங்கியதற்கான எந்த தடயமும் சடலங்கள் கிடந்த அறையில் காணப்படவில்லை. அறையில் தூக்குக் கயிறும் இல்லை. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கொலையா, தற்கொலையா? என்கிற இரட்டைக் கோணத்தில் நித்யஸ்ரீயின் கணவன் நந்தகுமாரிடம் விசாரணைத் தொடங்கப்பட்டிருக்கிறது. பிரேத அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணமும் தெரியவரும். உயிரிழப்புக்கு முன்பு நடந்த விவகாரங்களைக் கண்டறிய போலீஸாரும் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.