Allu Arjun: `மீண்டும் மீண்டும்!- இந்தாண்டில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் சிக்கிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜூன் மீது இந்தாண்டு மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி `புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்ல, வெளியான குறுகிய நாட்களிலேயே 1000 கோடி வசூலையும் இத்திரைப்படம் எட்டியிருக்கிறது.

இத்திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சி கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜூனும் படக்குழுவினரும் வருகை தந்துள்ளனர். அல்லு அர்ஜூனின் வருகைக்குப் பிறகு அவரைக் காண ரசிகர்கள் பலரும் திரண்டனர். அதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் போலீசார் அப்போது தடியடி நடத்தினர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்திருந்தார். மேலும், அவருடைய 9 வயது மகனும் மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

Allu Arjun

இந்த சம்பவத்தை எண்ணி வருத்தம் தெரிவித்து அல்லு அர்ஜூன் அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 25 லட்ச ரூபாய் நிதியளிப்பதாகவும் கூறியிருந்தார். இதுமட்டுமல்ல, சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவுகளையும் ஏற்பதாக அல்லு அர்ஜூன் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெலங்கானா காவல் துறையினர் அல்லு அர்ஜூன் மீதும் அவருடைய பாதுகாப்பு குழு மீதும், சந்தியா திரையரங்கத்தின் நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

பிறகு, திரையரங்கத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார் அல்லு அர்ஜூன். இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் வைக்க தெலங்கானா மாநிலம், நம்பள்ளி நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது. அதன் பிறகு அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரிய மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து `நடிகர் என்ற காரணத்திற்காக இந்த அசம்பாவிதங்களுக்கு அவர் காரணமாவாரா? எனக் கூறி அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது தெலங்கானா நீதிமன்றம்.

Allu Arjun

அல்லு அர்ஜூனின் இந்த விவகாரம் குறித்து டோலிவுட் பக்கமும் கோலிவுட் பக்கமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரேவதியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த காவல் அதிகாரியும், ``அல்லு அர்ஜூனும் படக்குழுவினரும் திரையரங்கத்திற்கு வருகை தருவதாக முன் அறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை. அவரின் வருகையால் கட்டுக்குள் அடங்காத கூட்டமும் கூடிவிட்டது. என விளக்கமளித்தார். ஆனால், மற்றொரு பக்கம் சந்தியா திரையரங்கம், ``படத்தின் நடிகர் நடிகைகள் இந்த ஸ்பெஷல் காட்சிக்கு வருகை தரவுள்ளதால் ரசிகர்கள் அதிகமாக கூடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆதலால் டிசம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்! என அனுமதி கேட்டதாக ஒரு கடிதம் ஒன்றும் இன்று சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்திற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் வேறொரு வழக்கிலிருந்து விடுபட்டார் அல்லு அர்ஜூன். ஆந்திரா மாநிலத்தில் கடந்த மே 13-ம் தேதி சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட தனது நண்பர் ஷில்பா ரவி ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த சம்பவம் அப்போது ஆந்திர அரசியலில் பெரும் பேசுப்பொருளானது. தேர்தல் நடப்பதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது நண்பரான ஷில்பா ரவி ரெட்டியின் வீட்டிற்குச் சென்றார்.

Allu Arjun at Shilpa Ravi Reddy House

அல்லு அர்ஜூனின் வருகையை அறிந்த அவருடைய ரசிகர்கள் ஷில்பா ரவி ரெட்டியின் வீட்டை சூழ்ந்தனர். பிறகு, அல்லு அர்ஜூன் பால்கனிக்கு வந்து ஷில்பா ரவி ரெட்டியின் கையை காட்டி, `` ஷில்பா ரவி ரெட்டி எனது நெருங்கிய நண்பர். அவருக்கு உதவி தேவைப்பட்டால் எப்போதும் அவருக்காக வந்து நிற்பேன். அப்படித்தான் இன்றும் அவருக்காக வந்திருக்கிறேன். அரசியல் கட்சியை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நான் இங்கு வரவில்லை. என் நண்பருக்காக வந்திருக்கிறேன். எனக் கூறியிருந்தார். அனுமதியில்லாமல் கூட்டத்தை கூட்டியதற்காகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் அல்லு அர்ஜூன். அதன் பிறகு கடந்த நவம்பர் 6-ம் தேதி இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. இப்படி இந்தாண்டு கூட்டம் கூடிய காரணத்தினாலேயே அவர் மீது இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.