Google Top 10 : `லாபதா லேடீஸ் டு கோட் - இந்தாண்டு அதிகமாக தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள்
வருடத்தின் இறுதிநாட்கள் வந்துவிட்டது....
ஸ்பாடிஃபை, கூகிள் என அனைத்து நிறுவனங்களும் இந்த வருடத்தின் டாப் விஷயங்களை வெளியிட தொடங்கிவிட்டது. `Wrapped up என அவரவர் அதிகமாக கேட்ட பாடல்களின் விவரத்தை வரிசைப்படுத்தி யூசர் நபர்களுக்கு கொடுத்திருக்கிறது ஸ்பாடிஃபை. அதே போல, கூகிளும் இந்தாண்டு அதிகளவில் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை வெளியிட்டிருக்கிறது. அந்த வரிசையில் ,இந்தியளவில் இந்தாண்டு கூகிளில் அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலில் இரண்டு தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த பட்டியலில் முதலாவதாக பாலிவுட்டில் வெளியான `ஸ்த்ரீ 2 திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. பாலிவுட்டில் சூப்பர் நேச்சுரல் திரைப்படங்களுக்குப் பெயர்போன மாடாக் சூப்பர் நேச்சுரல் யூனிவர்ஸுக்கு கீழ் இத்திரைப்படம் வரும். அதாவது இங்கு கோலிவுட்டில் எல்.சி.யூ என்கிறார்களே...அதுபோல பாலிவுட்டில் இருக்கும் ஒரு திரைப்பட யூனிவர்ஸ் இது. இந்த யூனிவர்ஸுக்கு கீழ் வரும் `முஞ்சியா, `ஸ்ட்ரீ 2 என இரண்டு திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் `கல்கி 2898 AD திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் இதுவும் ஒன்று!
மூன்றாவதாக `12th ஃபையில் திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இத்திரைப்படம் கடந்தாண்டு வெளியான திரைப்படம். இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களெல்லாம் இந்தாண்டு வெளியான திரைப்படங்கள்தான். பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உருவான `12th ஃபையில் திரைப்படம் பலரின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்து இந்தாண்டும் அதிகமானோரை கூகிளில் தேட வைத்திருக்கிறது. நான்காம் இடத்தில் `லாபதா லேடீஸ் திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமல்ல, இந்தாண்டு ஆஸ்கருக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக அனுபப்பட்ட திரைப்படமும் இதுதான்!
ஐந்தாவதாக இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான `ஹனுமான் திரைப்படம் அதிகமாக தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யூனிவர்ஸுக்கு கீழ் வரும். டோலிவுட்டில் பிரபலமான ஒரு யூனிவர்ஸ் இது. இந்த யூனிவர்ஸின் அடுத்த திரைப்படமான `ஜெய் ஹனுமான் திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஹனுமானாக நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். ஆறாவது இடத்தில் விஜய் சேதுபதியின் `மகாராஜா திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. கூகிள் தேடலில் மட்டுமல்ல இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலிலும் இப்படம் டாப் இடத்தில் இருக்கிறது.

பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் டிரெண்டிங்கில் இடம் பிடித்து பேசு பொருளான திரைப்படம்தான் ஏழாவது இடத்தில் இருக்கிறது. கோலிவுட், டோலிவுட் என ஹிட்டடித்த மாலிவுட் படைப்பான `மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏழாவது இடத்தில் இந்தப் பட்டியலில் இருக்கிறது. அடுத்ததாக எட்டாவது இடத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விஜய்யின் `தி கோட் திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான `சலார் திரைப்படம் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. பத்தாவது இடத்தில் `ஆவேஷம் திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் தொனியில் இத்திரைப்படத்தின் கதாபாத்திரத்தின் மூலம் கலகலப்பு காட்டினார் ஃபகத்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


