அன்று வேட்டையாட தெரியாத அப்பாவி; இன்று மனிதர்களை தாக்கும் வேகம் - சொம்பு மூக்கு முதலையின் சோகக்கதை

கோடை விடுமுறைகள்ல முதலைப்பண்ணையும் நம்மோட சுற்றுலாவுல ஓர் ஆப்ஷனா இருக்கும். அந்தளவுக்கு, வனவிலங்குகள் போலவே முதலைகள் பற்றியும் அறியும் ஆவல் மக்களுக்கு உண்டு.

ஆனால், இதென்ன சொம்பு மூக்கு முதலை. பேரே புதுசா இருக்கேன்னு பலருக்கும் தோணலாம். இதைப் பத்தி காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ச.முகமது அலியிடம் கேட்டோம்.

இந்த முதலையோட சரியான பேரு கரியால் (Gharial). கரியால் அப்படிங்கிறது ஓர் இந்திப்பேர். காரி அப்படின்னா தண்ணிக்குடிக்கிற குவளை. கரியால் முதலையோட மூக்கு நீண்டு, நுனி மட்டும் குவளை மாதிரி வீங்கி இருக்கும். அதனாலதான், வட இந்தியாவுல இதை கரியால்னு குறிப்பிடுறாங்க. தென் இந்தியாவுல சொம்பு மூக்கு முதலைன்னு குறிப்பிடுறாங்க. இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இந்த வகை முதலைகள் வட இந்தியாவுல மட்டும்தான் இருக்கு. தென் இந்தியாவுல கிடையாது.

gharial crocodile

கரியால் முதலைகளோட இனத்தை இங்கிலீஷ்ல கேங்ஜட்டீஸ் (gangeticus)னு சொல்வாங்க. ஆங்கிலேயர்கள் இந்த முதலையை முதன் முதலா கங்கைக்கரையில பார்த்ததால, கங்கையோட ஆங்கிலப்பேரான Ganges-ஐ கரியால்களுக்கு கேங்ஜட்டீஸ்னு வெச்சிட்டாங்க. மத்தபடி, கரியால்கள் கங்கை, பிரம்மபுத்திரா, யமுனான்னு பல வட இந்திய ஆறுகள்ல வாழ்ந்திட்டிருக்குங்க. சரி, இந்த முதலைகளுக்கு மட்டும் ஏன் மூக்கு நீண்டு, நுனியில சொம்பு மாதிரி இருக்குன்னு தோணுது இல்லியா..? எல்லாமே அதோட சர்வைவலுக்காகத்தான். ஆண், பெண் ரெண்டு கரியால்களுக்குமே மூக்கு நீண்டுதான் இருக்கும். ஆனா, ஆண் கரியால்களுக்கு மட்டும் மூக்கு நுனியில சொம்பு மாதிரியான ஓர் அமைப்பு இருக்கும். இனப்பெருக்க காலத்துல ஆண் முதலைகள் மூச்சுவிடும் ஒலியின் அதிர்வை நீர் வழியாகவே உணர்ந்து பெண் முதலைகள் தேடி வரும். இதுக்காகத்தான் ஆண் கரியால்களின் மூக்கின் நுனியில் சொம்பு மாதிரியான அமைப்பை இயற்கை படைச்சிருக்கு.

இந்தியா முழுக்கவே ஆறுகள் பாழா தான் கிடக்கு. அதுலேயும் வட இந்திய ஆறுகளோட நிலைமை இன்னும் மோசம். கங்கையோட நிலைமையைப் பார்த்தா எனக்கு கண்ணீரே வரும். ஆறுகள் பாழ்பட்டதால, 2000 வரைக்கும் மொத்தமே ஆயிரத்து ஐநூறு கரியால்கள்தான் இந்தியாவுல இருந்துச்சு. அதுக்குப்பிறகு அரசாங்கம் முயற்சி எடுத்து கரியால்களை இனப்பெருக்கம் செய்ய வெச்சது. ஐரோப்பா கண்டத்துல ஓர் ஆண் கரியால் கிடைக்க, அதையும் கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய வெச்சாங்க. இன்னிக்கு கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா, கங்கையோட துணை நதிகள்னு மொத்தமா 3 ஆயிரத்துல 4 ஆயிரம் வரைக்கும் கரியால்கள் இந்தியாவுல இருக்கலாம். கரியால்கள் 20 அடி நீளம் வரைக்கும் வளரும். எடை 800 கிலோ வரைக்கும் இருக்கலாம்.

gharial crocodile

கரியால்களை ஆங்கிலத்துல பொய்யான முதலைகள் (false crocodile)னு சொல்வாங்க. ஏன்னா, இதுகிட்ட உருவம் மாதிரி முதலையோட சில பண்புகள் மட்டுமே இருக்கும். மத்தபடி, முதலைக்கான பல இயல்புகள்ல மாறுபட்டுதான் இருக்கும்.

கரியால்கள் 90 சதவிகிதம் நீர்ல தான் இருக்கும். ஓய்வெடுக்கிறது, தூங்குறது, இணை சேர்றதுன்னு எல்லாமே தண்ணிக்குள்ள தான் செய்யும். முட்டையிடுறப்போ மட்டும் கரைக்கு வந்து மணல்வெளியில குழிப்பறிச்சு முட்டையிட்டு மூடிட்டுப் போயிடும். மத்த முதலைகள் குட்டிகளைப் பாதுகாக்கும். கரியால் அப்படி செய்யாது. முட்டைகள் அதுவா பொரிஞ்சு தண்ணிக்குள்ள போயிடும். மற்ற முதலைகள் 50 சதவிகித நேரம் தண்ணில இருந்தா, மீதி நேரம் நிலத்துல இருக்கும்.

gharial crocodile

கரியால்களுக்கு வேட்டையாடத் தெரியாது. கரியால்களோட வாய் அமைப்பு, பல் அமைப்பு காரணமா அதுங்களால மீன்களை மட்டும்தான் சாப்பிட முடியும். மற்ற முதலைகள் தண்ணிக்குடிக்க வர்ற மான் மாதிரியான சிறிய விலங்குகளை மறைஞ்சிருந்து தாக்கி சாப்பிடும். கரியால்களோட பல் அமைப்பு முன்னும் பின்னுமா இருக்கும். இதுல ஒரு மீன் சிக்கிட்டா அதால தப்பிக்கவே முடியாது. மற்ற முதலைகளுக்கு பல் அமைப்பு நேராக இருக்கும்.

மற்ற முதலைகள் குழந்தைகள் தவழ்கிற மாதிரி ஒரு காலை முன்னாடி, ஒரு காலை பின்னாடி வெச்சு நகரும்; நீச்சலடிக்கும். ஆனா, கரியால் ரெண்டு முன்னங்கால், ரெண்டு பின்னங்கால் ஒரே மாதிரி வெச்சு நகரும்; நீச்சலடிக்கும் என்றவர், இதன்பிறகு கரியால் பற்றி சொன்ன விஷயங்கள் எல்லாமே மனசை கனக்க செய்கிற தகவல்கள்தாம்.

முகமது அலி

கரியால்கள் கங்கைக்கரையில அதிகமா வாழும்னு சொல்லியிருந்தேன் இல்லியா. அதனாலேயே கங்கைக்கரை ஓரத்துல அரைகுறையா எரிக்கப்பட்டு கங்கையில விடப்படுற பிணங்களை சாப்பிட்டு சாப்பிட்டு கரியால்களோட குணமே கெட்டுப்போயிட்டதா சில ஆராய்ச்சிகள் சொல்லுது. மீன்கள், எப்போதாவது ஆமைகள்னு சாப்பிட்டுக்கிட்டிருந்த கரியால்கள் இப்போ ஆடு, மாடு, நாய், பூனைகளையும் சாப்பிடுறதாவும் அந்த ஆய்வுகள் சொல்கின்றன. கங்கையில குளிக்க வர்றவங்களோட கால்களை கடிக்கிறது, அவங்களைத் தாக்குறதுன்னு கரியால்களோட இயல்பே மாறிப்போய் இருக்கு. பிணங்களைச் சாப்பிட்டு பழக்கப்பட்ட கரியால்கள், கங்கையில இறங்கி நிக்கறவங்களோட கால்களை பிணம்னு நினைச்சு கடிச்சிருக்கலாம். தவிர, தென் கிழக்கு ஆசியாவின் சில நாடுகள்ல கரியால்களை பண்ணைகளில் வளர்த்து சாப்பிடுறாங்க. முதலைகளோட பரிணாமம் மிக மிக நீண்டது. இப்போ வாழ்ந்துட்டிருக்கிற முதலைகளோட மூதாதைகள் டைனோசர்களையே பார்த்தவை. அந்தளவுக்கு பழமையான ஊர்வன முதலை. அந்த முதலை இனத்தைச் சேர்ந்த கரியால்களோட இன்றைய நிலைமை கண்ணீர் வரவழைக்கிற அளவுக்குதான் இருக்கு என்கிறார் வருத்தமுடன் முகமது அலி.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.