தலைமுறை தடுமாற்றம் - அனுபவப் பகிர்வு | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
தூரத்து சொந்தத்தின் ஒரு எளிய குடும்ப விழாவில் கலந்து கொண்டு, நிறைவுற்றபின் நல்ல விருந்து உண்டு, வீடு திரும்ப ஃபிளாட்டின் வெளியே நானும் என் மனைவியும் வந்து நின்றோம்.
அது புறநகர்ப்பகுதியின் ஒரு பக்கம். அதேபோல் இன்னொரு பகுதிக்குப்போக வாடகை கேப் ஏற்பாடு செய்ய என்னுடைய செல்லில் முயன்று கொண்டிருந்தேன்.
பஸ் நிறுத்தம்வரை நடந்து சென்று, வரும்வரை காத்திருந்து ஏறி, இறங்குமிடம் வந்தவுடன் வீடு செல்வது, இந்த வயதில், எங்கள் இருவருக்குமே சற்று கடினம்.
நீண்டநேரம் போக்கு காட்டியபின், ஆட்டோ ஏழு நிமிடங்களில் வருமென்று செல்காட்டியது. சில சமயங்களில் சில டிரைவர்கள் நம்மிடம், எங்கு செல்கிறோம் என்று விசாரித்துவிட்டு, அதில்காட்டும் தொகையை விட கூடுதலாக கோரி அடம்பிடிப்பர்.
அவசரம் கருதி, பயணிகளும் பேரம் பேசுவதைத் தவிர்ப்பர். நல்லவேளை, போன் எதுவும் வரவில்லை. குறிப்பிட்ட நேரத்தில், ஆனந்த், அதுதான் ஆட்டோ டிரைவர் பெயர், மிடுக்காக ஓட்டிவந்து நாங்கள் ஏறுவதற்கு வசதியாக நிறுத்தினார்.
பின் நம்பரைச் சொன்னவுடன் கிளம்பினார். பயணத்திற்கு குறிப்பிட்ட தொகையை விட, அடாவடியாக அதிகம் கேட்பவர்களிடம், நானும் கொடுக்கமாட்டேனென்றோ, கேட்டதில் பாதிதான் கொடுப்பேனென்றோ சண்டையிடுவேன். ஆனால் எதுவும் அதிகமாக கேட்கவில்லையென்றால், நானே அதிகம் கொடுத்துவிடுவேன்.
"இந்த டிரைவர் பையனுக்கு நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரியும் போலிருக்கிறது" என்று சிரித்தாள் என் மனைவி.
நியாயமாக நடந்துகொள்கிறவர்களை ஊக்குவிப்பது நம் கடமையல்லவா?
மெயின் ரோட்டிற்கு வந்தவுடன், போக்குவரத்து நெரிசலுக்குத் தக்கவாறு நேர்த்தியாக ஓட்டினார். அநாவசியமாக ஹாரன் அடிக்காமலும், பின்னால் வந்த வாகனங்களுக்கு, சரியாக கை சமிக்ஞை காட்டியும், வேகத்தடைகளில் மெதுவாகவும் வாகனத்தை செலுத்தினார்.

இவ்வளவுக்கிடையேயும் செல்லில் இணைக்கப்பட்ட ஹெட்போனில் யாரிடமோ பேசிக்கொண்டும் வந்தார்.
கூட்டமில்லாத இடத்தில் ஓரமாக நிறுத்தி, என்னிடம், "சார்! போகும் வழியில், எனக்குத்தெரிந்தவர் ஒருவர் அவசரமாக செல்ல, இந்த ஆட்டோவில் வரலாமா என்று கேட்கிறார். வந்தால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?" எனக்கேட்க, நானும், "இல்லை ஆனந்த், அவசரம் என்று சொல்கிறாய். வரட்டும்" என்றேன்.
சிறிது தூரம் கடந்தபின், சாலையோரம் காத்திருந்த ஒரு இளம்பெண்ணின் அருகில் ஆட்டோ நின்றது. அவன் சீட் ஓரத்திற்கு நகர்ந்து, அந்த பெண்ணுக்கு இடம் கொடுக்க தயாரானார். அதைப்பார்த்த என் மனைவி," ஏண்டிம்மா! இங்கு வந்து என்னுடன் உட்கார்ந்து கொள்.
என்னதான் தெரிந்தவர் என்றாலும், உனக்கும் சங்கோஜமாக இருக்கும்; அவனுக்கும் வண்டி ஓட்ட சிரமமாக இருக்கும்" என்றாள் அவளோ, "பரவாயில்லை ஆன்டி! உங்களுக்கு கஷ்டம் வேண்டாம்" என்றாள்.
நான் வெளியே இறங்கி, இதில் என்னம்மா கஷ்டம்? சங்கடப்படாமல் உட்கார்ந்து கொள்ளம்மா" என்றேன். எங்கள் வற்புறுத்தலை மீறமுடியாமல், பின்னால் வந்து அமர்ந்தாள். என் மனைவியும் அவள் பெயரைக்கேட்டு, பூரணியாம் அவள் பெயர். அவளிடம் கனிவாக பேசிக்கொண்டு வந்தாள். வண்டி வேகமெடுத்தது.

எனக்கு ஒரு போன் கால், மெயின் ரோட்டிலுள்ள மருந்து கடைக்காரரிடமிருந்து. நான் கேட்டிருந்த மருந்துகள் தயாராக இருப்பதாகவும், பணியாட்கள் நிறையபேர் விடுப்பிலிருப்பதால், வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்க இயலவில்லை என்றும், நேரில் வந்து வாங்கிச்செல்லலாமென்றும் கூறினார். நான் என் மனைவியிடம், "நாம் பார்மசியில் இறங்கி, பின்னர் நடந்து வீட்டிற்கு செல்லலாம்" என்றேன்.
வண்டிவேகம் குறைந்து, மூன்றுசாலை சந்திப்பைக் கடந்து, பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது, பூரணி அங்கு இறங்குவதாக சொன்னாள். என்றார். தொடர்ந்து செல்லலாமே!" என்றேன்.
"இல்லை அங்கிள்! ஷேர் ஆட்டோவில் இந்த ரோட்டின் உள்ளே செல்ல வேண்டும்"
என்று மூன்றாவது சாலையைச் சுட்டிக் காட்டினாள். அவள் இறங்கிய பின்னர் பார்மஸியில் நிறுத்தினான்.
காத்திருந்து வீட்டில் கொண்டு வந்துவிடுவதாக சொன்னான். "இல்லையப்பா! மருந்து வாங்கியபின், புதுகாய்கறிகள் கிடைத்தால் வாங்கிக் கொண்டு, பக்கம் தானே, பொடிநடையாக வீட்டிற்கு சென்று விடுகிறோம்" என்று சொல்லிவிட்டு, குறிப்பிட்ட தொகையைவிட அதிகமாகவே கொடுத்தேன். அதற்குள் அடுத்த சவாரிக்கான அழைப்புவர, கையசைத்து விடைபெற்றார்.

பக்கத்து கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புது நாட்டு காய்கறிகளை கூடைகளில் வைத்து விற்கும் பெண்களிடம், பேரம் பேசாமல் கொஞ்சமாக வாங்கிக்கொண்டு, மெதுவாக நடந்து வந்தோம். பூரணி அதே நிறுத்தத்தில் இன்னும் நின்று கொண்டிருந்தாள் சிக்னலுக்காகவோ என்னவோ, அந்த பக்கம் திரும்பி போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
கூப்பிடச்சென்ற என் மனைவியைத்தடுத்து, "ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கலாம். தொந்தரவு பண்ணாதே" என்றேன்.
அருகில் செல்லும்போது, பூரணி கோபமாக பேசிக் கொண்டிருந்தது, காதில் விழுந்தது. "ஆனந்த் கூச்ச சுபாவம். கிராமத்திலிருந்து வந்ததால் அப்படி! சிட்டியில் இவ்வளவு பார்த்தும் இன்னும் அப்படியே இருக்கிறான். அதிசயமாக இன்று சேர்ந்து உட்கார்ந்து வர ஒத்துக்கொண்டான். ஆனால் வந்த இரண்டு பெரியவர்கள், என்னை அவர்களுடன் உட்காரவைத்துக்கொண்டு, அறுத்துத்தள்ளி விட்டார்கள். " அவள் கோபத்திற்கு காரணம் தெரிந்தவுடன், அவ்விடத்தைவிட்டு, விரைவாகக் கடந்தோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

