ஆபிஸ் அனுபவம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

ஆபிஸில் பணி புரியும் போது கிடைக்கும் அனுபவங்களில் சில நினைக்க நினைக்க சிரிப்பை வரவழைக்கும்... சிலவற்றை எப்போது நினைத்தாலும் கோபம் கொள்ள வைக்கும்... சில அனுபவங்கள் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டும்... சில நம்மை பக்குவப்படுத்தும். அப்படி எல்லாம் கலந்த மறக்க முடியாத சில இனிய அனுபவங்கள் நம் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்.

எனக்கு வேறு ஒரு ஊருக்கு பணி மாற்றலான போது என்னுடன் டெக்னிகல் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவுகளிலிருந்து பதினைந்து பேருக்கு மேல் அதே ஊருக்கு மாற்றலானார்கள்..

தினமும் ரயிலில் போய் வருவோம். இரண்டரை மணி நேர ரயில் பயணம். எங்களுடன் பாங்க், எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் மாற்றலாகிய சில பள்ளி ஆசிரியர்களும் தினமும் அந்த ரயிலில் பயணம் செய்வார்கள்.

எல்லோரும் ஒரு குழுவாக வீட்டுக் கவலைகளை எல்லாம் மறந்து ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டும் பாட்டுகள் பாடியபடியும் நாங்கள் பயணிக்கும் அந்த கம்பார்ட்மென்ட்டே கலகலவென்று இருக்கும்.

சித்தரிப்புப் படம்

ரயில் ஸ்டேஷனிலிருந்து ஏழு மணிக்கு கிளம்பும். முதலில் ஏறுபவர்கள் மற்றவர்களுக்கு இடம் பிடித்து வைப்பார்கள். முதல் அரை மணி நேரம் பிரேயர்.

அவரவர் ஸ்லோக புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களைச் சொல்வார்கள். சிலர் நியூஸ் பேப்பரில் மூழ்கி விடுவார்கள். சிறிது நேரத்திற்குப் பின் ப்ரேக்ஃபாஸ்ட். இட்லி, தோசை, உப்புமா, போஹா, கிச்சடி என வெரைட்டி டிபனை பகிர்ந்து உண்போம். பிறகு நாங்கள் இறங்கும் ஸ்டேஷன் வரும் வரை தூக்கம் தான்.

ரயில் ஓட்டுநர் முதல் பழங்கள் விற்பவர், டீ, காபி கொண்டு வருபவர்கள் என எல்லோரிடமும் பேசி நலம் விசாரிப்போம். பழங்கள் விற்கும் பெண் நன்றாகப் பாடுவார்.

எல்லா சினிமா பாடல்களும் அத்துபடி. நேயர் விருப்பமாக நாங்கள் கேட்கும் பாடல்களைப் பாடி அசத்துவார்.

வயதான முதியவர் ஒருவர் யாசகம் கேட்டு வருவார். அவரிடம் பேசியபோது, ``என் மகன் மகளுக்கு திருமணமாகி எனக்கு பேரன் பேத்திகள் இருக்கிறார்கள் “ என்றார்.

சொந்த வீடு, கார் கூட இருக்கிறது என்றவரிடம் பின் ஏன் யாசகம் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘இது என் தொழில் என்று கூறினார். ஆனால் இது எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியவில்லை.

சித்தரிப்புப் படம்

விருப்பமில்லாத வேறு ஊர் பணி மாற்றத்தையும் விரும்பத்தக்கதாக மாற்றிக் கொண்டோம். மேலும் வாழ்க்கைக்கு உதவும் பலவற்றையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் பணி மாற்றம் அமைந்தது. சொந்த ஊருக்கு மாற்றல் கிடைத்து வந்தாலும் மற்ற துறையைச் சேர்ந்த ரயில் நண்பர்களுடன் எங்கள் நட்பு தொடர்ந்தது.

ஒரு முறை நடிகர் விஜய்யை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். பயிற்சிக்காக எங்கள் அலுவலக பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தேன்.

அப்போது அலுவலக வளாகத்தில் நடிகர் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. விஜய் மற்றும் சக நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தனர்.

விஜய் தன் ஷாட் முடிந்தவுடன் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். முதல் நாள் அவருடன் நாங்கள் பேச முடியுமா என்ற தயக்கத்தில் இருந்தோம்.

அடுத்த நாள்  இடைவேளையின் போது வெளியே வந்த விஜய்யிடம் நானும் என் சிநேகிதிகள் சிலரும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். சிறிது நேர உரையாடலுக்குப் பின் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம்.   என் சிநேகிதி  வெளி நாட்டில் வசிக்கும் தன் மகள் விஜய்யின் ரசிகை என்று கூறி அவளுடன் பேச முடியுமா எனக் கேட்டார்.

உடனே எந்தவொரு தயக்கமும் இன்றி அவளுடன் பேசினார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். பெரிய ஸ்டார். எந்தவொரு பந்தாவுமில்லாமல் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று வியந்து போனோம். 

விஜய்யிடம் நானும் என் சிநேகிதிகள் சிலரும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.

அலுவலகத்தில் நமது அவசர தேவைகளுக்கு லீவு கிடைப்பது என்பது கூட குதிரைக் கொம்பு தான்.  லீவு சாங்ஷனுக்கு சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்போம்.

ஒரு அலுவலகத்தில் நிகழ்ந்த நகைச்சுவையான சம்பவம் இது. அந்த அலுவலக மேலதிகாரி மிகவும் கண்டிப்பு பேர்வழி. வடநாட்டவர். அங்கு பணி புரிந்த ஊழியர்களுக்கு விடுப்போ பெர்மிஷனோ அவ்வளவு சுலபமாக கிடைக்காது. 

அவர் மகளின் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற சமயம் அந்த அதிகாரி தினமும் தேர்வு மையம் இருக்கும் இடத்திற்கு மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டு  தேர்வு முடியும் வரை அங்கேயே காத்திருந்து பின் அழைத்து வருவார். ஒரு நாள் மகள் தேர்வெழுத உள்ளே போனவுடன் ஒரு ஒரமாக நியூஸ் பேப்பர் படித்தபடி உட்கார்ந்திருந்தார்.

அப்போது ஒரு பாம்பு சர்ரென அவர் படித்துக் கொண்டிருந்த பேப்பரின் மீது ஏறி விட பாம்பைப் பார்த்து திடுக்கிட்டு நடுங்கிய அதிகாரி நொடியில் பேப்பரைத் தூர எறிந்தார்.

‘பாம்பு பாம்பு’ என அவர் அலறுவதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வர பாம்போ மனிதர்களின் குரல் கேட்டு பயந்து  அருகில் இருந்த புதரில் வேகமாக சென்று மறைய ஒரே ரகளை தான்.

சித்தரிப்புப் படம்

மறு நாள் அலுவலகம் வந்த அந்த அதிகாரி ஊழியர்களிடம் பாம்பு  சம்பவத்தை விவரித்தார். அன்று முதல் யாரேனும் அவர் கேபினுக்குப் போனால் பாம்பு சம்பவத்தை சொல்ல ஆரம்பித்து விடுவார். அவர் மனநிலையும் மாறி விடும்.

அலுவலக ஊழியர்களும் இதைப் பயன்படுத்தி லீவோ பர்மிஷனோ வேண்டும் என்றால் அவரிடம் ‘சார் பாம்பு’ என்று ஆரம்பித்து விட்டால் போதும் லீவும் சுலபமாக கிடைத்து விடும். அந்த அதிகாரி மாற்றலாகி செல்லும் வரை இது தொடர்ந்தது.

ஆபிஸ் பணியின் போது  எதிர்கொள்ளும் பல பிரச்னைகள் , டென்ஷன்களுக்கிடையேயும்  சில சின்ன சின்ன நிகழ்வுகள் நம்மை மாற்றி மனதை லேசாக்கி விடுவது நிஜம்.

-வி. ரத்தினா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.