சென்னை: அழகுகலை நிபுணர் மர்ம மரணம் - ஆண் நண்பரிடம் போலீஸ் விசாரணை!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் கடந்த 5- ம் தேதி சென்னை வந்தார். அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான சென்னை, சூளைமேடு சண்முகம் சாலை பகுதியில் வசித்து வரும் முகமதுவை (31) இளம்பெண் சந்தித்தார். பின்னர் இருவரும் பாண்டி பஜார் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். கடந்த 7-ம் தேதி இளம்பெண்ணைச் சந்திக்க அவரின் தோழி விடுதிக்கு வந்தார். அப்போது திடீரென இளம்பெண் மயங்கி விழுந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தோழி, இளம்பெண்ணை ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், இளம்பெண்ணின் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளது. அதனால் உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினர்.

மரணம்

இதையடுத்து இளம்பெண்ணை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரின் தோழி அழைத்துச் சென்றார். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதோடு இளம்பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண் மரணம் குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் இளம்பெண்ணின் மரணம் குறித்து அவரின் தோழி, ஆண் நண்பர் முகமது ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பாண்டிபஜார் போலீஸார் கூறுகையில், `` உயிரிழந்த இளம்பெண் அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார். வேலை தேடி சென்னை வந்த அந்த இளம்பெண், தனக்குத் தெரிந்த ஆண் நண்பர் முகமதுவுடன் தங்கியிருந்திருக்கிறார். அப்போது இருவரும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் இளம்பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இளம்பெண்ணின் தோழி மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து அழகு கலை நிபுணருடன் தங்கியிருந்த முகமதுவிடம் விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இளம்பெண் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.