Mahindra: விமானக் கம்பெனியுடன் என்ன சண்டை? புது எலெக்ட்ரிக் காரோட பெயரை மாற்றிய மஹிந்திரா

மஹிந்திராவை ஒரு வகையில் கமல் என்று சொல்லலாம் போல! புது ரிலீஸ்களின் போது ஒவ்வொரு சர்ச்சைகளாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு மிலிட்டரி கிரீன் கார்களை விற்கக் கூடாது; இது சட்ட விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்கிற வழக்கின் கீழ், தனது ஸ்கார்ப்பியோ N-ன் மிலிட்டரி கிரீன் கலர் காரின் தயாரிப்பை நிறுத்தியது மஹிந்திரா. 

இப்போது புதுச் சர்ச்சை; புதுக் காரிலேயே முளைத்திருக்கிறது. லேட்டஸ்ட் ரிலீஸான BE 6e எலெக்ட்ரிக் கார்தான்… அதாவது இந்தக் காரின் பெயர்தான் சர்ச்சைக்குக் காரணம். 

BE 6e என்கிற பெயரை ஏற்கெனவே க்ளாஸ் 12 வாகனங்களின் கீழ் டிரேட்மார்க் செய்து வைத்திருந்தது மஹிந்திரா. அந்தப் பெயரிலேயேதான் எஸ்யூவி எலெக்ட்ரிக்கையும் காட்சிப்படுத்தியது. அதாவது BE என்றால் Born Electric என்கிற ப்ளாட்ஃபார்மில் உருவாகும் கார் என்று அர்த்தம். இந்த வாகனத்தோடேயேதான் XEV 9e என்கிற காரையும் போன நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தி இருந்தது. 

Be 6

இப்போது அந்த 6E என்கிற பெயருக்குத்தான் ஒரு விமான நிறுவனத்துடன் கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கிறது மஹிந்திரா. அது InterGlobe Aviation Limited (IndiGo) எனும் இண்டிகோ நிறுவனம்.

காரணம், அந்த 6E என்பது இண்டிகோ நிறுவனம் தனது விமானங்களுக்குச் சூட்டியிருக்கும் குறியீட்டுப் பெயர். ‛‛நாங்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வரும் பெயரை நீங்கள் எப்படி ரிஜிஸ்ட்டர் செய்யலாம்?’’ என்று மஹிந்திரா மீது வழக்குப் போட்டுவிட்டது இண்டிகோ. 

Indigo

‛‛நாங்கள் கேட்டகிரி வாயிலாக இதற்குத் தனித்துவமாக 6E எனும் பெயைரத்தான் சூட்டியிருக்கிறோம். எந்த வகையிலும் இண்டிகோவைக் குறிப்பிடும் வகையில் பெயர் வைக்கவில்லை. மேலும் இரண்டு துறைகளுமே வேறு. அது விமானத் துறை. இது வாகனத் துறை. அது 6E. நாங்கள் வைத்திருப்பது 6e. இண்டிகோவின் இந்தக் குற்றச்சாட்டு சரியே இல்லை! இது வாகனத் துறையில் பெரிய போட்டியை உருவாக்கிவிடும் ஆபத்து அதிகம்!’’ என்று மஹிந்திரா வாதமிட்டுக் கொண்டிருக்கிறது. 

இருந்தாலும், ‛எதுக்குடா வம்பு’ எனும் பாணியில் தனது காரின் பெயரை BE 6 என்று தற்காலிகமாகப் பெயர் மாற்றம் செய்திருக்கிறது மஹிந்திரா. இனிமேல் BE 6E கார் இல்லை; BE 6 கார்னு தான் கூப்பிடணும். கார் பேர் மாறினாலும் சண்டை தொடரத்தான் செய்யுமாம். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.