ஆற்றில் துணி துவைத்த மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு நடந்த சோகம்; 7 பேர் கைது; நடந்தது என்ன?

தேனி அருகே பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்த போஜராஜ் (80) என்பவரது மகன் தாமோதரன் (42). மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளியான இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் சாலையோரங்களில் கிடக்கும் மதுபாட்டில்கள், அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

உயிரிழந்த தாமோதரன்

கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் பின்புறம் உள்ள அணை கருப்பணச்சாமி கோயில் அருகே செல்லும் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியில் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையறிந்த தாமோதரனின் தந்தை போஜராஜ் மகனை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் வீட்டிற்கு அழைத்து வந்த மறுநாள் தாமோதரன் உயிரிழந்தார்.

இதையடுத்து தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகப் பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தாமோதரன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகத் தெரியவந்தன. இதையடுத்து சந்தேக வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

கைதானவர்கள்

அணை கருப்பண்ணசாமி கோயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இளைஞர்கள் சிலர் அப்பகுதியிலிருந்தது தெரியவந்தது. அதிலிருந்த அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (23), ஹரீஸ்பிரவீன் (19), விஜயபாரதி (19), அன்புச்செல்வம் (22), புவனேஸ்வரன் (18) உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து விசாரித்தனர்.

அதில், நவம்பர் 6ஆம் தேதி ஆற்றுப்பகுதியில் தாமோதரன் அவரது துணியைத் துவைத்துக் கொண்டு இருந்தபோது அருகே இருந்த அந்த இளைஞர்கள் மீது அழுக்குத் தண்ணீர் தெறித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாமோதரனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

கைது

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாற இளைஞர்கள் அருகில் கிடந்த தென்னை மட்டை, கம்புகளை எடுத்து தாமோதரனைத் தாக்கியுள்ளனர். இதில் தாமோதரன் மயக்கம் அடைந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அருண்குமார் மற்றும் மாயக்கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.