ஷோரூம் கண்ணாடியை உடைத்து புதிய கார் திருட்டு - பழனியில் பரபரப்பு... நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதிய ஆயக்குடியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி PLA மாருதி கார் விற்பனை செய்யும் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. கார் ஷோரூமுக்கு அல்லிமுத்து என்ற 75 முதியவர் இரவு நேர காவலாளியாக இருந்து வருகிறார். நேற்று வழக்கம்போல இரவு நேர காவல் பணிக்கு வந்த அல்லிமுத்து, இரவு 11 மணிக்கு மேல் அருகில் உள்ள கடை வாசல் அருகே படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது கார் ஷோரூமின் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துவிட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஸ்விப்ட் கார் ஒன்றை திருடிச் சென்றனர். மேலும் ஷோரூமில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி, ஹார்ட் டிஸ்க்குகளையும் எடுத்துச் சென்றனர்.
கண்ணாடி உடைக்கப்பட்ட சத்தம் கேட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துவிட்டு, ஷோரூம் மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலாளர் வந்து பார்க்கும்போது கண்ணாடி உடைக்கப்பட்டு கார் திருடப்பட்டு இருந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். சாலையில் வழிநெடுகிலும் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்ததை வைத்து பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளார். சிறிது தூரத்திற்கு பிறகு கார் எந்த திசை நோக்கிச் சென்றது எனத் தெரியாமல் திரும்பியுள்ளார்.

இதையடுத்து ஆயக்குடி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து காவலாளி அல்லிமுத்துவிடம் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த புதிய கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

