Parenting: அதென்ன ரெண்டுங்கெட்டான் வயசு? குழந்தைகளிடம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கால காலமாக குழந்தைகளை ரெண்டுங்கெட்டான் வயசுல இருக்குங்க என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். அது எந்த வயது, அந்த வயதில் அவங்க என்னென்ன செய்வாங்க என்று குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு சொல்கிறார்.

Parenting

பத்து வயதுதான் இரண்டுங்கெட்டான் வயது. ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால், அந்த வயதில்தான் யார், எதைச் சொன்னாலும் அப்படியே நம்பி விடுவார்கள். நல்லது, கெட்டது பிரித்துப் பார்க்கத் தெரியாது. பத்து வயதில் குழந்தைகள் செய்கிற பல செயல்கள் செம இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்கும்.

மன உணர்வுகளை கன்ட்ரோல் செய்வார்கள். அதனால், தங்கள் பிரச்னைகளை தாங்களே கையாள விரும்புவார்கள். சிலர் அதைச் செய்யவும் செய்வார்கள்.

நண்பர்களிடம் பேசி முடிவுகளை எடுக்க ஆரம்பிப்பார்கள். இதனால், அவர்களை அறியாமலேயே தங்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

இந்த வயதில் மற்றவர்களை வியந்து பார்க்கிற குணம் அதிகமாக இருக்கும். தன்னைவிட அழகான, அறிவான, ஏன் நாகரீகமாக உடை உடுத்துகிறவர் மீது கூட ஒரு வியப்பு வரும். சில பிள்ளைகள், தாங்கள் வியக்கிறவர்களை தங்களுடைய ரோல் மாடலாகக்கூட எடுத்துக் கொள்வார்கள்.

தவறான விஷயங்களின் பக்கம் பிள்ளைகள் தடுமாற ஆரம்பிக்கிற வயதும் இதுதான். அதனால், நம் வீட்டில் இதைச் செய்ய மாட்டோம், இப்படிச் செய்ய மாட்டோம். இதெல்லாம் நம் வீட்டுக்கு மரியாதைக் குறைவான விஷயம் என்பது போல எடுத்துச் சொல்ல வேண்டும்.

Parenting

பொஸஸிவ்னெஸ் உணர்வு வர ஆரம்பிக்கும். குறிப்பாக ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகளுக்கு இது அதிகமாக இருக்கும். இவள் என் தோழி; எனக்கு மட்டுமே தோழி என்பது மாதிரியான எண்ணங்கள் வரும். விதவிதமான இலை கலெக்‌ஷன், ரூபாய் நோட்டு கலெக்‌ஷன் என்று ஏதோ ஒரு விருப்பம் வரும். இந்த வகை விருப்பங்கள் ஆண் பிள்ளைகளிடம் அதிகம் காணப்படும். இருபாலருக்குமே பொதுவான விஷயமென்று பார்த்தால், அடுத்தவருடைய உணர்வுகளைப் படிக்க பழகுவார்கள். அது முக பாவனைகளை வைத்தும் இருக்கலாம், உடல்மொழியாகவும் இருக்கலாம்.

இந்த வயதில் உடன் பிறந்தவர்களுடன் அதிகம் சண்டை போடுவார்கள். அடுத்தவர்களைப் போல இருக்க வேண்டும்; அவளைவிட பெட்டராக தெரிய வேண்டுமென்கிற அழுத்தம் வருகிற வயதும் இதுதான். தனித்து இல்லாமல் எல்லோருடனும் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்ய விரும்புவார்கள்.

பிரைவஸியை விரும்ப ஆரம்பிப்பார்கள். அதற்கு நீங்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

குடும்பமாக உட்கார்ந்து பேசும்போது, அவர்களும் நானும் பெரிய மனுஷன்/மனுஷி தான் என்கிற தோரணையில் பங்கு கொள்ள ஆரம்பிப்பார்கள்.

டாக்டர் தனசேகர் கேசவலு

ஆராய்ச்சி மாதிரியான விஷயங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள், நூலகம் செல்ல ஆரம்பிப்பார்கள். சுதந்திர மனப்பான்மை வந்துவிட்டதால், அவர்களுடைய வீட்டுப்பாடம் போன்றவற்றுக்கு நம்முடைய உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். யுக்தியாகச் செயல்பட ஆரம்பிப்பார்கள்.

சிலர் வெடித்துச் சிதறுவதுபோல கோபப்படுவார்கள், வலுச்சண்டைக்குப் போவார்கள், சில பிள்ளைகள் மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்துகிற அளவுக்குக்கூட செல்வார்கள். அதனால்தான், இதை ரெண்டுங்கெட்டான் வயசு என்கிறார்கள் பெரியவர்கள். இதற்கு மருத்துவரீதியாக எந்தக் காரணமும் கிடையாது. மனரீதியாக என்னப் பிரச்னை என்றுதான் கவனிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் தனசேகர் கேசவலு.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.