``அதானியை முதலமைச்சர் சந்திக்கவேயில்லை; பொய் பரப்பினால் நடவடிக்கை - செந்தில் பாலாஜி எச்சரிக்கை!
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி, சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
மறுபக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இதுதொடர்பாக பேசியதாகத் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், அதானியை முதல்வர் சந்திக்கவேயில்லை என்றும், அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை எனவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருக்கிறார்.
இது குறித்த அறிக்கையில், ``தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளியிட்டு வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர், அதானியைச் சந்திக்கவும் இல்லை, அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை.

`ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும். என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
"தொழிலதிபர் அதானியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அதிமுக ஆட்சி ஒப்பந்தத்தில் கூறிய யூனிட்டுக்கு 7.01 சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து திமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கு…
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 6, 2024
தி.மு.க அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று, கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016-க்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது. அதானி நிறுவனம் 31/03/2016-க்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 உரிமை கோரியது. 31/03/2016 தேதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது.
31/03/2016-க்குப் பிறகு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 வேண்டுமென அதானி நிறுவனம் கோரியது. மேலும், 22/03/2016 முதல் மின்சாரம் வழங்கிட தயாராக இருந்ததாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் (TANGEDCO) முழு செயலற்றதன்மையின் காரணமாக மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் திரித்து கூறியது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்து, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10 கட்டணத்தை கொடுக்க முடியுமென தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் அதானி நிறுவனம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முன், MP எண்.25(2020) மற்றும் MP எண். 26(2020) என இரு மனுக்களை தாக்கல் செய்தது. ஆயினும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 20/07/2021 அன்று, அதானி நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதானி நிறுவனம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முன் (APTEL) மேல்முறையீடு செய்தது (எண்.287 - 2021). மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டை அனுமதித்து, யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டண விகிதத்தை 07/10/2022 அன்று அங்கீகரித்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், அதானி நிறுவனம், ரூ. 568 கோடிக்கான பில்களை PRAPTI (Payment Ratification and Analysis in Power Procurement) போர்ட்டலில் சமர்ப்பித்தது. PRAPTI போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட பில்களை 75 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென விதி உள்ளது.
ஆயினும், மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2022-ல், சிவில் மேல்முறையீட்டு முறையில் (எண். 38926), இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியது. 17/02/2023 அன்று, உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதன் காரணமாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ. 568 கோடி செலுத்தியது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீடு, (மேல்முறையீட்டு எண் 1274 மற்றும் 1275 - 2023) இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014-ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது.
.jpg)
முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், `அவரைச் சந்தித்தார், `இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என்று செந்தில் பாலாஜி எச்சரித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

