IIT Madras: பெற்றோர் அனுமதி இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்!
சென்னை ஐஐடி வளாகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உடல்ரீதியாக எந்தளவுக்கு திறனுடன் இருக்கிறார்கள் எனப்தைப் பரிசோதிக்கும் தாங்கும் திறன் (Endurance Testing) பரிசோதனை கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சோதனைக்குப் பிறகு மாணவர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, அந்த மாணவர்களின் பெற்றோர்களில் சிலர், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
அதில், ``மாணவர்கள் மீது மருத்துவப் பரிசோதனை செய்யும் போது ஐசிஎம்ஆர் (ICMR) வழிகாட்டுதலின்படி பெற்றோரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், அவ்வாறு பெறாமல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் கடந்த நவம்பர் 15-ம் தேதி பெற்றோர் கூட்டம் நடத்தி அதில் பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சர்ச்சை தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில், ``மாணவர்களின் ஷூக்களில் ஸ்மார்ட் இன்ஸோல்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் அதனை அணிந்து 10 நிமிடங்கள் வரை நடக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த் ஸ்மார்ட் இன்ஸோல் நேரடியாக உடலில் தொடர்பில் இல்லை. ஆனால் அத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் மூலம் தரவுகளை சேகரிக்கப்பட்டது. இந்த பரிசோதனை என்பது எவ்விதத்திலும் மருத்துவப் பரிசோதனை இல்லை. அதனால், இதற்கு பெற்றோர் முன் அனுமதி பெறத் தேவையில்லை. இந்தப் பரிசோதனை தாங்கும் திறன் சார்ந்தது.

இதில் மாணவர்களுக்கு மாத்திரை போன்றோ மருந்து போன்றோ எவ்வித பொருளும் உட்கொள்ள வழங்கப்படவில்லை, உடலில் செலுத்தப்படவும் இல்லை. அதனால் இது மருத்துவப் பரிசோதனை ஆகாது. இனி இதுபோன்ற பரிசோதனைகளுக்கு பெற்றோர்களிடம் முன்கூட்டியே சம்மதம் பெற்றே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், தனியார் பள்ளிகள் இயக்குநரகம், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவிருக்கிறது.
அதனால், ஐஐடி வளாகத்தில் இருக்கும் பள்ளி நிர்வாகமும், புகாரளித்தப் பெற்றோர்களும் நேரில் வரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் எம்.சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

