``மயானத்தில் மணல் கொள்ளை; 7 சடலங்களை காணவில்லை.. - பொது மக்கள் சாலை மறியல்... நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, பூத்தாம்பட்டி அருகே ஏ.டி.காலைனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், கற்பகம் தம்பதியின் மகன் விஸ்வநாதன் (19) மாற்றுத்திறனாளி. இவர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரின் சடலத்தை புதைப்பதற்காக புத்தாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது மயான பகுதியில் சுமார் 10 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டிருந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

10 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்ட பகுதி

மண் அள்ளப்பட்டிருந்த பகுதியில் 7 பேரின் சடங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சடலங்களை காணவில்லை எனவும், மண்ணை திருடியவர்கள் தான் சடலங்களையும் சேர்த்து அள்ளிச் சென்றுவிட்டதாக கூறி வேடசந்தூர் - எரியோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்

தகவலறிந்த வேடசந்தூர் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரித்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் வேடசந்தூர் - எரியோடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயானத்தில் புதைக்கப்பட்ட 7 சடலங்களை காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.