``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்... - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன நடந்தது?
வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்து ரகளை செய்திருப்பார். அது போன்ற ஒரு புகார் மத்தியப் பிரதேச ஆட்சியாளரிடம் சென்றிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி தேவதாஸ் ரத்தோர், தன் குடும்பத்துடன், சில ஆவணங்களை தரையில் விரித்து வைத்து அமர்ந்திருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோதுதான், `கடந்த ஆறு மாதங்களாக என் கிணற்றைக் காணவில்லை. அதை மீட்டுத் தர வேண்டும் எனப் புகார் அளித்திருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ந்த ஆட்சியர் பவ்யா மிட்டல், விவசாயியை அழைத்து என்ன விவரம் என விசாரித்திருக்கிறார். அப்போதுதான் உண்மை தெரியவந்தது. அதாவது, விவசாயி தேவதாஸ் ரத்தோரின் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை, அவரின் மாமா, தன்னுடைய நிலம் எனக் கூறி எடுத்துக் கொண்டதாகவும், அந்தப் பகுதியில்தான் விவசாயி ரத்தோரின் கிணறு இருந்ததாகவும், அதை மாமா எடுத்துக்கொண்டதால், விவசாயம் செய்யமுடியவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், கடந்த ஆறு மாதங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளிக்க முயன்றும், எதுவும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை ஆட்சியர் அஜ்மீர் சிங் கோண்டி, ``இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம் இடத்தைப் பிரிக்கும் போது, மது போதையில் இருந்த எழுத்தாளர் கிணறு பகுதியை அவரின் மாமா நிலத்துடன் இணைத்து எழுதிவிட்டதுதான். உண்மையில் கிணறு காணாமல் போகவில்லை. தற்போது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயியிடம் கிணறுப் பகுதியை மீட்டுக் கொடுத்துவிட்டோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
