தொடரும் அத்துமீறல்... ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிப்பு!

குறுகிய கடல் பரப்பை கொண்ட பாக் நீரிணை பகுதியினை ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவு மட்டுமே நாட்டின் எல்லையாக உள்ள நிலையில் இந்த குறுகிய கடல்பரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். அதிலும் இயற்கை சீற்றம், பாதுகாப்பு தொடர்பான தடைகள், மீன்பிடி தடை காலம், மீன் வரத்து குறைவு போன்றவற்றால் ஆண்டிற்கு 80 நாள்கள் கூட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க முழுமையாக செல்ல முடியாத நிலை உள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், அவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதுடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தால் உத்தரவிடப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பாக் நீரிணையை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. தற்போது வரை 80 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 427 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளையும் அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரிபாக்‌ஷன், ராஜபிரபு, முனீஸ்வரன், ஆரோக்கியம் மற்றும் பெட்ரிக் நாதன் என்பவரது படகில் சென்ற பெட்ரிக் நாதன், யோபு, நிஷாந்த் உள்ளிட்ட 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பின் இலங்கை மீன் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். இவர்களது இரு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மீன்பிடி தடை காலத்திற்கு பின் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக சிறை பிடித்து வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசும், மீனவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்களால் மீனவர்களிடையே பதற்றம் நிலவுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.