Sabarmati Report: `படக் குழுவினரைப் பாரட்டுகிறேன்... - தி சபர்மதி ரிப்போர்ட் குறித்து பிரதமர் மோடி
2002-ம் ஆண்டு, இந்தியாவின் தற்போதைய பிரதமராக இருக்கும் மோடி, அப்போது குஜராத் முதல்வராக பதவி வகித்தார். பிப்ரவரி 27, 2002 அன்று முசாபர்பூரிலிருந்து அகமதாபாத் நோக்கி சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் வந்து நின்றது. அப்போது, கோச் எஸ் 6 பெட்டி தீக்கிரையானது. இதில் 59 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக மோடி தலைமையிலான குஜராத் அரசு விசாரணை கமிஷன் அமைத்தது.
அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ``கொல்லப்பட்ட 59 பேரில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேவகர்கள்" எனக் குறிப்பிட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் வெடித்தக் கலவரம், சுமார் 3 மாதங்கள் வரைத் தொடர்ந்தது. இந்தக் கலவரத்தில் 254 இந்துகள், 790 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணாமல் போனதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடற்றவர்களானதாகவும் 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக, சிறப்பு SIT நீதிமன்றம் 31 பேரை மார்ச் 1, 2011 அன்று தண்டித்தது. அவர்களில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாக 2017-ம் ஆண்டு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை மையமாக வைத்து தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் வெளியானது. நீரஜ் சர்மா இயக்கியுள்ள இந்த படத்தில், விக்ராந்த் மஸ்ஸி, ராஷி கண்ணா, ரிதி துர்கா, பர்கத் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்தில் நேற்று திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணி எம்.பி-கள், படக் குழுவினரும் பார்த்திருக்கின்றனர். அதன் பிறகு பிரதமர் மோடி, ``முன்றாவது முறை பிரதமரான பிறகு நான் பார்த்த முதல் படம் இது" எனக் கூறியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நாடாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பார்த்தேன். படத்தின் தயாரிப்பாளர்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


