30 மணி நேரம்… 49 செ.மீ மழை… புதுச்சேரியை சிதைத்துப் போட்ட `ஃபெஞ்சல்’ புயல் – ஸ்பாட் ரிப்போர்ட்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, கடந்த நவம்பர் 27-ம் தேதி `ஃபெஞ்சல்’ புயலாக உருவெடுத்தது. அந்தப் புயல் மாமல்லப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே நேற்று மாலை கரையை கடக்கும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
அதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பே புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல துறைமுகத்தில் 7-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டதை தொடர்ந்து, கடற்கரை சாலை, பாரதி பூங்கா, படகு இல்லங்கள் போன்றவை மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு இலேசாக துவங்கிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் துவங்கியது. அதேபோல கடலின் சீற்றம் அதிகரித்தததால், சுமார் 7 அடி வரை அலைகள் மேலே எழுந்தது.
பாண்டி மெரினாவில் கடல் அலை மேலெழுந்து கரையை தாண்டி சாலைக்கு வந்ததால், மீனவ கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. அதையடுத்து சுமார் 300 போலீஸார் உடனடியாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று காலை முதல் மிதமாக பெய்த மழை, மாலை 5.30 மணிக்கு புயல் கரையை கடக்க ஆரம்பித்ததும் கனமழையாக மாறியது. அதன் காரணமாக மாலை ஆறு மணிக்கெல்லாம் வெள்ளக்காடானது புதுச்சேரி. காற்றும் பலமாக வீசியதால் நகரின் முக்கிய பகுதிகளில் இருந்த மரங்களும், மின்சாரக் கம்பங்களும் உடைந்து விழுந்தன.

புயலின் சீற்றம் அதிகரித்தால் நேற்று மதியம் புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஒயிட் டவுன் என்றழைக்கப்படும் பிரெஞ்ச் டவுன் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பும், நேற்று மாலை துண்டிக்கப்பட்டது. அதனால் நேற்று இரவு முழுவதும் இருளில் மூழ்கியது புதுச்சேரி.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 24 மணி நேரத்தை கடந்து விட்ட நிலையில், இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. நேற்று நள்ளிரவு முதல் காற்று மழையின் வேகம் அதிகரித்ததால், அண்ணா சாலை, காமராஜர் சாலை, புஸ்ஸி வீதி, நேரு வீதி, இந்திராகாந்தி சிலை சந்திப்பு, ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு, கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் மற்றும் ரெயின்போ நகர் பகுதிகளில் 3 அடிக்கு மேல் வெள்ளம் கரை புரண்டோடியது.

தற்போது வரை 49 செ.மீ அளவு மழை பெய்திருப்பதால் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளைத் தவிர, அனைத்து வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்கள் மிதக்கும் அளவுக்கு வெள்ளம் புகுந்ததால், அனைவரும் முதல் மாடிக்கு சென்றுவிட்டனர். முதல் மாடி இல்லாதவர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் தஞ்மடைந்திருக்கின்றனர். இதனால் கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் பகுதிகள் நகரிலிருந்து துண்டிக்கப்பட்டு, தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன.
வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கும் கிருஷ்ணா நகர் மற்றும் வெங்கட்டா நகர் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் பாக்கெட் மற்றும் உணவு வேண்டும் என்று, அந்த பக்கம் செல்பவர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல வீடு முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், தங்கள் வீட்டு படிக்கட்டுகளின் மீது தஞ்சமடைந்திருக்கும் மக்கள், தங்களை படகுகளை அனுப்பி காப்பாற்றுமாறு, அரசு அறிவித்த தொலைபேசி எண்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் போதுமான அளவு படகுகள் இல்லாததால், பொதுமக்களை மீட்கும் பணி தாமதாகி வருகிறது. அதேபோல சாரம், சக்தி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பிருந்தாவனம், கோவிந்த சாலை, ஜீவா நகர், நெல்லித்தோப்பு, உப்பளம், வாணரப்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளையும் முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து, அந்த மக்கள் மீட்புக்காகவும், உணவுக்காகவும் காத்திருக்கின்றனர்.
கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை வில்லியனூர், திருக்கனுர், பாகூர் போன்ற பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. அங்கு தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்ட துணை ராணுவப்படையினரும், தீயணைப்பு வீரர்களும் படகுகளில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். ஆனாலும் மீட்புப் பணியில் களப்பணியாளர்களும், படகுகளும் குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், உணவு வழங்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றுவதில் அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர் அப்பகுதி மக்கள். புதுச்சேரியில் நேற்று இரவு முதலே மழை வலுக்கத் தொடங்கியதால், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதனால் நேற்று இரவு முதலே பல தன்னார்வ அமைப்புகள் அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், ``புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடும் சேதமடைந்திருக்கின்றன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்” என்றார்.
மழையின் வேகம் தற்போது குறைந்திருக்கும் நிலையில், காற்று அதிவேகமாக வீசி வருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


