அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!- மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனமும் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள இடம்

இந்த விவகாரத்தில், அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால், அங்கு சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும், ``மத்திய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதிய மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், ``தமிழக அரசு இத்திட்டத்துக்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாது" என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த சுரங்க விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், `மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கிய விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை ஒன்றிய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை, நீர்வளத் துறை அமைச்சர் 3-10-2023 நாளிட்ட கடிதத்தின் மூலமாக ஏற்கெனவே ஒன்றிய அரசுக்குத் தெரிவித்திருந்தார்.

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்குக் கடிதம். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | pic.twitter.com/GkbAKxUzjs

— TN DIPR (@TNDIPRNEWS) November 29, 2024

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தனது 2-11-2023 நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார். டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம். இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது.

இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்குச் சேதங்களை ஏற்படுத்தும். மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

எனவே, இந்தப் பகுதிகளில் இது போன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுவதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துங்கள். என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.