Rain Alert: நாளை உருவாகிறது புயல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?| Live

"கடந்த நாட்களில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருக்கிறது. தொடர்ந்து வலுப்பெற்று நாளை புயலாக உருமாறக்கூடும். அதைத்தொடர்ந்து தமிழக கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாகத் தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும்.

அடுத்த 24 மணிநேரத்துக்கு மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுச்சேரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.

27ம் தேதி, புதுச்சேரியிலும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் முதல் புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.

28ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

29ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது." - வானிலை மையத் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் 

மழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது டெல்டா பகுதியில் அதிக தாக்கம் எனக் கூறப்படும் நிலையில் இன்று மழை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர்.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தில் தலைமைச்செயலர், துணை முதல்வர், பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை

"சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 26,27,28 நாட்களில் பரவலான இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்" - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

`புயலாக வலுபெறுகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

தற்போதைய இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இலங்கையின் திருகோணமலையிலிருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தூரத்திலும், நாகையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 800 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இங்கிருந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 27ம் தேதி புயலாகத் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது. இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரையைத் தாண்டி தமிழக கடற்கரையை அடையும்.

தனியார் வானிலை ஆர்வலர் சொல்வதென்ன?!

சென்னையில் மீண்டும் மழைப் பொழிவு தொடங்கியிருக்கிறது. அடுத்த 4-5 நாட்களுக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை விட டெல்டா மாவட்டங்களில் அதிக மழை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.

எக்ஸ் தளத்தில் அவர் கூறுவதன்படி, ``காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது இலங்கைக்கு தெற்கே மையம் கொண்டுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் மேற்கு மற்றும் வடமேற்க்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரவிருக்கிறது. மிகவும் மெதுவாக நகர்வதனால் தமிழகத்தின் அருகாமையை அடைய 4 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

வடகிழக்கு பருவமழையின் அதிகபட்ச மழைப்பொழிவு

சென்னை மற்றும் KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை) உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை இருக்கும். ஆனால் 27-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தொடர்ச்சியான மழையை எதிர்பார்க்கலாம். சில நேரங்களை கன மழை, அதிகன மழையும் பெய்யக்கூடும். இதுதான் இந்த வடகிழக்கு பருவமழையின் அதிகபட்ச மழைப்பொழிவாக இருக்கும்’ என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

தென் தமிழகத்தைப் பொருத்தவரையில், ராமநாதபுரம் நிச்சயம் மழைப்பொழிவை எதிர்கொள்ளும் என்றும் அதற்கு தென்பகுதி மாவட்டங்களில் மழை பெய்வது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளார். உள் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்காது என்றும் தெரித்துள்ளார்.

டெல்டாவுக்கு ரெட் அலர்ட்?

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் அதிக மழையைப் பெறுவது டெல்டா பகுதிதான் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.

நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களுடன் கடலூரிலும் மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம். இன்று அல்லது நாளை ரெட் அலர்ட் விடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலைமையம் இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் தென்காசி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.