``இந்தியில் LIC இணையதளம்; எப்படித் திணிக்கலாம் என்பதிலேயே மத்திய அரசு..! - இபிஎஸ், வைகோ கண்டனம்
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு என மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி, ``பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது.
இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு- கடும் கண்டனம்!
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 19, 2024
பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி… pic.twitter.com/8LZQwfphSR
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ``நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பத்தாண்டு காலத்தில் மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை நடத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு கட்டாயப்படுத்தப் படுகிறது. வானொலி ,தொலைக்காட்சிகளில் இந்தி மயம், இந்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயர், குற்றவியல் சட்டங்களை மாற்றி இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்று பல வகைகளில் ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக புகுத்தி வருகிறது.

ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றிய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது போல ஒன்றிய அரசின் சமூக ஊடகங்களில் முழுதாக இந்தி மொழிதான் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. காப்பீட்டுத் துறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய முறையில் அனைத்து மாநில மொழிகளிலும் எல்.ஐ.சி இணையதளம் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும்.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு, இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடும் நிலை ஏற்படும். எனவே இந்தி மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி இணையதளத்தை முன்பிருந்ததைப் போல ஆங்கில மொழியில் உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/Neerathikaaram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

