Doctor Vikatan: பிக் பாஸ் போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத்து அதிக கேலி, கிண்டல்களுக்கு உள்ளானதையும் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார். குரல் தொடர்பான இந்தப் பிரச்னை நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். பெண்களுக்கு ஆண் தன்மையோடும் ஆண்களுக்கு பெண் தன்மையோடும் குரல் இருப்பதைப் பார்க்கிறோம். இவர்களுக்கெல்லாம் மருத்துவத்தில் தீர்வு உண்டா? குரலை மாற்ற சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்

மருத்துவர் பி.நட்ராஜ்

பொதுவாகவே சிறு குழந்தைகளுக்கு (ஆண் குழந்தைகளுக்கும்) குரல்  மென்மையானதாக இருக்கும். பதின் வயதுகளில் ஆண் குழந்தைகளுக்கு குரல் கரகரப்பாக மாறும். குரல் உடைவது என்று இதைச் சொல்லக் கேட்டிருப்போம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிக் பாஸ் போட்டியாளருக்கு குரல் மாற என்ன பிரச்னை, எப்போதிலிருந்து அந்தப் பிரச்னை இருக்கிறது என்ற விவரங்கள் தெரிந்தால்தான் அது குறித்து விளக்கமாகப் பேச முடியும்.

குரலின் தன்மைக்கு பல காரணிகள் உள்ளன. குரலுக்கு மிகவும் அடிப்படையானது குரல் நாண் (vocal cord). குரலின் தன்மையில் முக்கியமான பங்கு வகிப்பது குரல் வளையின் (larynx) வடிவம் மற்றும் அளவு.  அதேபோல தொண்டையின் நீள, அகலம்,  வாய் மற்றும் பற்களின் அமைப்பு , மூக்கு மற்றும் முக எலும்புகளில் உள்ள (காற்று நிறைந்துள்ள) இடைவெளி (sinus) ஆகியவற்றுக்கும் இதில் சிறு பங்கு உண்டு. பெண்களுக்கு குரலில் வரும் கரகரப்பு தன்மை, பெரும்பாலும் குரல் நாணில் வரும் சிறிய கட்டி (vocal nodule) அல்லது வீக்கத்தால் ஏற்படுகிறது. 

குரல்

இதற்கு பிரதான காரணம்  குரலை உயர்த்திப் பேசி, குரல் நாணை  கொள்வதுதான்.. பணி நிமித்தமாக குரலை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, ஆசிரியர்கள், மேடை பேச்சாளர்கள் போன்றோர். குரலில் மாற்றங்களை உணர்பவர்கள், இஎன்டி மருத்துவரை அணுகினால், குரல் மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை பரிந்துரை செய்வார். ஏறக்குறைய அனைத்து குரல் பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லா பிரச்னைகள் மிகச் சில அல்லது மிக அரிதானவை. ஆனால், எந்தப் பிரச்னைக்கும் நீண்ட நாள்களாக மருத்துவ ஆலோசனை பெறாமல் இருந்தால், தீர்வு காண்பது  சற்று கடினம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.