குழந்தைகள் தினம்: காசாவிலிருந்து லெபனான் வரை... குழந்தைகளைத் துரத்தும் போர்!
இந்த குழந்தைகள் தினத்தில் தலா அஜு அப்வா என்ற பத்து வயது சிறுமியை அறிமுகம் செய்துகொள்வோம். இவர் பெயர்தான் வித்தியாசமானது, மொழியும் இனமும் வேறாக இருந்தாலும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்று கனவுகளுடன் சுற்றித்திரிந்துண்டிருந்த சிறுமிதான் தலா.
வெள்ளை துணியைப் போர்த்தி கால்களில் ஸ்கேட்டிங் போர்டுடன் குண்டு விழுந்து இறந்த தலாவின் புகைப்படம் கடந்த செப்டம்பரில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. நீண்ட நாள்கள் போரினால் சுணங்கி போயிருந்த தலா, பிற குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என அடம்பிடித்ததால் அவளை அனுப்பியதை நினைத்து தாய் அழுவதையும், தலா ஸ்கேடிங் போர்டை பிடித்தபடி அவரது தந்தை கதறுவதையும் வீடியோவில் பார்க்க முடிந்தது.
இது தலாவின் கதை மட்டுமல்ல, போர் தொடங்கியது முதல் காசாவில் இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. இன்றும் காசாவின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு தலா தன் வாழ்க்கையை, மகிழ்ச்சியை, கனவை, உயிரை இழந்து கொண்டிருக்கிறாள்.
ஹமாஸை அழிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஸ்பான்சர் செய்ய காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் வெறியாட்டம் இதுவரை 14,000 குழந்தைகளைக் கொன்றுள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல்.
ஐ.நா குழந்தைகள் அமைப்புக் கூறுவதன்படி, காசாவில் 19 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இது காசாவின் மக்கள் தொகையில் 10ல் 9 பங்கு. இதிலும் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகள். ஒருநாளும் தங்கள் பழைய இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத இடத்துக்கு குழந்தைகள் வந்துவிட்டனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து துயருற்றிருக்கின்றனர். சுகாதார சீர்கேட்டால் பலர் நோயுற்று தவிக்கின்றனர். உணவு, தண்ணீர், சுகாதார பொருள்கள் மற்றும் மின்சாரம் இல்லாமல் இவர்கள் வாழ்க்கை இருளில் உழல்கிறது. உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இந்தக் குழந்தைகள் சந்தித்துள்ள நெருக்கடிகள் சரிசெய்ய இயலாதவை.

சியோனிஸ்டுகளின் தாக்குதலில் பிழைத்து, காசாவில் இருந்து லெபனானுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகளுக்கு கிடைத்த ஆசுவாசம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருவதனால் அங்கும் அதே குண்டு சத்தங்கள் குழந்தைகளின் செவிப்பறைகளை கிழிக்கின்றன.
கடந்த வாரம் லெபனானில் 192 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 1255 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். தலா அஜு அப்வாவைப் போன்ற பச்சிளம் குழந்தைகளைத் துரத்தும் இந்தப்போர் எப்போது ஓயும் என்ற கேள்விக்கு இஸ்ரேலிடமோ, அமெரிக்காவிடமோ பதில் இருக்கிறதா?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


