Doctor Vikatan: வியர்வைக்கும் எடைக்குறைப்புக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: நான் 37 வயது ஆண். எனக்கு மிதமான உடற்பயிற்சி (cardio) செய்யும் போது அதிக வியர்வை வெளியேறும். எடை இழப்பிற்கும் வியர்வைக்கும் தொடர்பு இல்லை என்பதை நான் அறிவேன். உடற்பயிற்சியில் ஏற்படும் வியர்வையை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் 

ஷீபா தேவராஜ்

வியர்வை என்பது எடைக்குறைப்பின் அடையாளமல்ல என்று நீங்கள் அறிந்திருக்கும் தகவல் உண்மைதான்.  எக்கச்சக்கமாக வியர்வை வெளியேறும்படி உடற்பயிற்சி செய்துவிட்டால், எக்கச்சக்கமாக எடையும் குறைந்துவிடும் என நினைப்பது தவறு.

நம் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதுதான் வியர்வையின் வேலை. அதாவது உடலின் வெப்பத்தைத் தணித்து, குளிர்விக்கும் இயல்பான நிகழ்வு அது என்று புரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், காரமாக ஏதாவது சாப்பிடும்போதும் உங்களுக்கு வியர்வை வெளியேறுவதைப் பார்ப்பீர்கள். அதன் மூலம் உங்கள் உடல் வெப்பநிலை தணிக்கப்படும்.

சிலருக்கு வியர்வை அதிகம் சுரக்கும். வேறு சிலருக்கு வியர்வை சுரப்பிகள் பெரிதாக ஆக்டிவ்வாக இருக்காது. வியர்வை சுரப்பிகள் ஆக்டிவ்வாக இல்லாதவர்களுக்கு என்னதான் வொர்க் அவுட் செய்தாலும் வியர்வை வெளியேறாது.

உடற்பயிற்சி

வியர்வை வெளியேறுவது என்பது பிரச்னைக்குரியது அல்ல. கொஞ்சம்கூட வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்னை. அதற்குத்தான் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வியர்வை எவ்வளவு வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு எடைக்குறைப்பும் இருக்கும் என்பது தவறான நம்பிக்கை.  எடைக்குறைப்பு என்பது உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு என இரண்டு விஷயங்களையும் பொறுத்தது. 

வியர்வை சுரப்பிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வேலை செய்யும். எனவே, அந்த விஷயத்தை நினைத்துக் குழம்பவோ, கவலைப்படவோ தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.