கார்களில் வர வேண்டாமே..!’ பாமக-வில் ராமதாஸின் சீர்திருத்தங்கள் பலன் தருமா?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் வந்து பங்கேற்கக் கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பா.ம.க-வினரை பேருந்து, மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

இதன் பின்னணி குறித்துப் பேசும் அந்தக் கட்சியினர், ``கடந்த 1988-ம் ஆண்டு பா.ம.க தொடங்கப்பட்டது. 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டது. போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தாலும், 6% வாக்குகளைப் பெற்றது. பிறகு 1991-ம் ஆண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை பா.ம.க ஒன்றாக சந்தித்தது. தேர்தல் முடிவில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றிபெற்றார். முதன்முறையாக அந்த கட்சி சட்டமன்றத்துக்குள் சென்றது. ஆளுநர் உரையில் குறுக்கிட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கப்பட்டார். இதனால் வட மாவட்டங்கள் முழுவதும் போராட்டம் வெடித்தது.

1996 தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றிகிடைத்தது. பிறகு 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. 4 தொகுதிகளில் வெற்றிபெற்று தலித் எழில்மலை சுகாதாரத்துறை இணை அமைச்சரானானர். பா.ஜ.க-வுக்கு வழங்கிய ஆதரவை அ.தி.மு.க திரும்பப் பெற்றுக்கொண்டதால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.

1999-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது. இதில் 5 இடங்களில் வெற்றிபெற்றது. அப்போது பா.ம.க-வுக்கு இரண்டு மத்திய அமைச்சர்கள் கிடைத்தனர். 2001 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 இடங்களை கைப்பற்றியது. 2004 தேர்தலில்தான் அன்புமணி கட்சிக்குள் வருகிறார். அப்போது 5 தொகுதிகளில் பா.ம.க வெற்றிபெற்றது. ரயில்வே துறை இணை அமைச்சராக ஆர்.வேலுவும், மத்திய சுகாதாரத்துத்துறை அமைச்சராக அன்புமணிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். 2006 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க 18 இடங்களைக் கைப்பற்றியது.

தேர்தல்

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- வுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பா.ம.க-வுக்கு எந்தத் தொகுதியிலும் வெற்றிகிடைக்கவில்லை. 2011-ல் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்டு தருமபுரியில் மட்டும் வென்றது. மீண்டும் அன்புமணி ராமதாஸ் மக்களவை உறுப்பினரானார். 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அன்று முதல் பெரும் சறுக்கல்தான். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.

இவ்வாறான தொடர் தோல்விகளால் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பா.ம.க இழந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என நினைத்த பா.ம.க-வுக்கு தோல்விதான் கிடைத்தது. இதனால் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையில்தான் வட மாவட்டங்களில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய்யும் அரசியல் களத்துக்கு வந்துள்ளார். கூடவே முதல் பொதுக்கூட்டத்தை விக்கிரவாண்டியில் நடத்தினார் விஜய். எனவே கட்சியை பலப்படுத்துவதில் ராமதாஸ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

ராமதாஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமான சிலர், "சமீப காலமாக கட்சியின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு முக்கிய நிர்வாகிகள் காரில் வந்துவிடுகிறார்கள். அவர்களுடன் 4, 5 பேர் மட்டுமே வர முடிகிறது. இதுவே பிற வாகனங்களில் வந்தால் கூடுதலாக மக்களை அழைத்து வர முடியும். அவர்களுடன் உரையாடிக்கொண்டே வர முடியும். எனவேதான் இந்த முடிவை ஐயா எடுத்திருக்கிறார். அதேநேரத்தில் வரும் காலத்தில் அதிக அளவில் பொது கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் மாற்றம் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சீனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு மீண்டும் வலுப்பெறும். அதேபோல பாட்டாளிகளின் விருப்பம் அறிந்து கூட்டணி வைக்க வேண்டும். இதுதான் சரியான பலனை கொடுக்கும்" என்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.