மகாராஷ்டிரா `சாதி வாரி கணக்கெடுப்பு; விவாசாயிகள் தற்கொலையை தடுக்க கமிட்டி- காங். தேர்தல் வாக்குறுதி

மகாராஷ்டிராவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும் மஹாயுதி கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியும் ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. ஆனால் தேர்தல் அறிக்கையை முறைப்படி அறிவிக்கவில்லை.

நேற்று பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மத்திய அமைச்சர் அமித் ஷா, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோர் இத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அத்தேர்தல் அறிக்கையில், லட்ஹி பெஹ்ன் யோஜனா திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1,500 தேர்தலுக்கு பிறகு 2,100 ஆக அதிகரித்து வழங்கப்படும்.

எதிர்க்கட்சிகள் தேர்தல் அறிக்கை

விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். உணவு பாதுகாப்பு, சரியான இருப்பிட வசதி செய்து கொடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும். முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.2100 ஆக அதிகரிக்கப்படும். 25 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 45 ஆயிரம் கிராமங்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். மரபுசாரா எரிசக்தி திட்டத்தின் கீழ் மின் கட்டணம் 30 சதவீதம் வரை குறைக்கப்படும்.

ஆட்சிக்கு வந்த 100 நாளில் 2028ம் ஆண்டுக்கான மகாராஷ்டிரா எதிர்கால திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். மகாராஷ்டிரா பொருளாதாரம் ஒரு டிரிலியன் டாலராக உயர்த்தப்படும். மேக் இன் மகாராஷ்டிரா திட்டத்தின் கீழ் புனே, நாக்பூர், நாசிக் நகரங்கள் ஏ.ஐ. தலைநகரங்களாக மாற்றப்படும். 2027ம் ஆண்டுக்குள் 50 லட்சம் பெண்கள் லட்சாதிபதியாக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, மஹாயுதி அரசு விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்காக பாடுபடும். அதனை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதில்லை. அதனால்தான் அவர்களின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை என்றார்.

எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஏற்கெனவே இக்கட்சிகள் அறிவித்த திட்டங்களாக பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய், இலவச பஸ் பயணம், தலா ரூ.500க்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பது போன்ற திட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதத்தில் இரண்டு நாள்கள் விடுமுறை விடப்படும். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும்.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், சுகாதார காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன. இதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, இத்தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய முக்கியமான தேர்தல் என்றும், மகாவிகாஷ் அகாடியால் மட்டுமே நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். சமூக நிலையை தெரிந்து கொள்ளவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறோம். மக்களை பிளவு படுத்தும் திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.