Delhi Ganesh: ``நேத்து நைட்கூட நல்லாதான் பேசினார்; திடீர்னு... - டெல்லி கணேஷ் மகன் மஹா உருக்கம்
பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 81.
தமிழ் சினிமாவில் காமெடி, வில்லன் என அத்தனை கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து அசத்தியிருக்கிறார். சொல்லப்போனால், இன்றைய `ஜென் சி உலகத்தின் மீம்ஸ்களிலும் இவருடைய காமெடி காட்சிகள் பெரும்பான்மையாக இருந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
டெல்லி கணேஷின் மறைவு குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவரின் மகன் மஹா, "அப்பாவுக்கு 80 வயசு ஆகிடுச்சு. இப்போ சமீபத்துல சதாபிஷேகம்கூட பண்ணியிருந்தோம். இப்போ கொஞ்சம் நாட்களாக வயது மூப்பின் காரணமாக சில பிரச்னைகள் வந்தது. ஆனால், திடீர்னு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. நேற்று இரவு வழக்கம்போல மாத்திரை கொடுக்கலாம்னு போனோம். அப்போது அவர் உடலிலிருந்து எந்த அசைவும் தெரியல. அடுத்ததாக மருத்துவரை அழைத்துப் பார்த்தோம்.
அவங்க அப்பா மறைஞ்சுட்டார்னு சொன்னாங்க. எங்களுக்கு இது மீளமுடியாத இழப்பு. நாளைக்கு காலைல அப்பாவினுடைய இறுதிச் சடங்குகள் நடக்கவிருக்கு. எங்க உறவினர்களும் பலர் வரணும், நடிகர் சங்கத்துல இருந்தும் வரவிருக்காங்க. அக்கா நேத்து இரவுகூட அப்பாகிட்ட எப்போதும் போல நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க. அப்பாவும் நல்லாதான் பேசினாரு. ஆனால் திடீர்னு இப்படி ஆகிடுச்சு..." என்றார் உருக்கமாக.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

