Doctor Vikatan: புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?

Doctor Vikatan: புடவை உடுத்துபவர்களுக்கு புற்றுநோய் வரும் என கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது.  அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா

கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா

இந்தியாவைப் பொறுத்தவரை சருமத்தை பாதிக்கும் ஸ்கின் கேன்சர் ஆபத்து, மற்ற புற்றுநோய்களோடு ஒப்பிடும்போது ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. டிராஸ்ட்ரிங் டெர்மடைட்டிஸ் (Drawstring dermatitis) என்பது உராய்தலால் ஏற்படும் ஒருவித சரும அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறிப்பது. இது  இறுக்கமாக உடுத்தும் புடவை, சல்வார் என எதன் காரணமாகவும் வரக்கூடும். வியர்வையோடு, தொடர் உராய்தலும், உடல்சூடும் சேரும்போது  அதன் விளைவாக பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

அரிதாக சிலருக்கு ஸ்குவாமஸ் செல் கார்சினோமா  (Squamous cell carcinoma) என்ற புற்றுநோய் பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் கேள்விப்பட்ட புடவை உடுத்துவதால் வரும் புற்றுநோய், இந்த ஸ்குவாமஸ் செல் கார்சினோமா வகையில்தான் வரும்.

உடலின் ஒரு பகுதி தொடர்ச்சியாக உராய்தலுக்கு உள்ளாகும்போதும், புண்ணாகும்போதும், அது ஆறுவதற்கு காலம் எடுக்கும் நிலையில், அது பின்னாளில் புற்றுநோயாக மாறும்  ரிஸ்க் இருக்கிறது. அந்த வகையில் புடவை, சல்வார், பாவாடை போன்றவற்றை இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கட்டும் பெண்களுக்கு சருமத்தின் அந்தப் பகுதி புண்ணாகவும், அது கவனிக்கப்படாத நிலையில் புற்றுநோயாகவும் மாறும் ரிஸ்க் இருப்பதையே நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உணர்த்துகிறது. அப்படியானால் புடவையோ, சுடிதாரோ, பாவாடையோ உடுத்தும் எல்லா பெண்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்குமா என்ற கேள்வி வரலாம். ரிஸ்க்கை தவிர்க்க சில விஷயங்களை எல்லா பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

இடுப்பைச் சுற்றி புடவையோ, பாவாடையோ, சுடிதாரோ உடுத்தும்போது, தினமும் ஒரே இடத்தில் கட்டாமல், தினமும் மாற்றி மாற்றிக் கட்டுவது அவசியம். ரொம்பவும் இறுக்கமாகக் கட்டாமல், சற்று தளர்வாகக் கட்ட வேண்டியது அவசியம். சருமத்தின் தன்மையில், நிறத்தில் ஏதேனும் மாற்றங்களைப் பார்த்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். புண், அரிப்பு என எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.