Amaran: சிவகார்த்திகேயனுக்குத் தெலுங்கில்... சாய் பல்லவிக்குத் தமிழில்... - பட விழாவில் சுவாரஸ்யம்
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தீபாவளியன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் `அமரன் திரைப்படம் வெளியாகியிருந்தது.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமான இதில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியான நாள்முதல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் அமரன் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறிருக்க, கடந்த திங்களன்று சென்னையில் அமரன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இயக்குநர், நடிகர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ``சாய் பல்லவி நிறைய, மனதில் நிற்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு, இந்த மாதிரியான கமர்ஷியல் வெற்றியும் முக்கியம்.
அதில், தமிழில் அவரின் முதல் பெரிய கமர்ஷியல் வெற்றி இந்த அமரன் படத்தில் அமைந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அடுத்து, சாய் பல்லவி சோலோவாக நடிக்கிற படங்களும் பிரமாண்ட வெற்றிபெறும். அது நடக்க எனக்கும் ஆசை." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவிலும் அமரன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தில் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, ``தமிழில் எனக்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட் தன்னுடன்தான் என சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். அதேபோல, இப்போது, தெலுங்கில் அவருக்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட் என்னுடன்தான் கிடைத்திருக்கிறது." என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


