IPL 2025: 42 வயதில் ஐ.பி.எல்லில் களமிறங்கும் ஆண்டர்சன் - பின்னணி என்ன?
ஐ.பி.எல் மெகா ஏலத்தைதைப் பற்றிய அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரைப் பதிவு செய்திருக்கிறார்.
மெகா ஏலத்திற்காக கிட்டத்த 1574 வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்திருக்கின்றனர். பெரும்பாலனவர்கள் இந்தியாவை சேர்ந்த வீரர்கள்தான். அதற்கடுத்தபடியாக தென்னாப்பிரிக்கவைச் சேர்ந்த 91 வீரர்களும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும் ஏலத்திற்காக பெயரை பதிவு செய்திருக்கின்றனர்.
இங்கிலாந்திலிருந்து பென் ஸ்டோக்ஸ் மாதிரியான வீரர்கள் இந்த மெகா ஏலத்திற்கு தங்களுடைய பெயரைப் பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல் இன் புதிய விதிமுறைப்படி மெகா ஏலத்திற்கு ஒருவர் பெயரைப் பதிவு செய்யவில்லையெனில் அடுத்தடுத்த மினி ஏலங்களிலும் அந்த வீரரால் பங்குகொள்ள முடியாது. இப்படியொரு கடுமையான விதிமுறை இருந்தும் பென் ஸ்டோக்ஸ் பெயரைப் பதிவு செய்யவில்லையெனில், அவர் ஐ.பி.எல்லில் கலந்துகொள்ள விருப்பப்படவில்லை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னுடைய பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அவருக்கு 42 வயதாகிறது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 700 க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவிட்டவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.
அவருடைய கரியர் முழுவதுமே அவர் ரெட் பால் கிரிக்கெட்டில்தான் அதிகமாகக் கவனம் செலுத்தியிருக்கிறார். இங்கிலாந்து சம்மர் சீசன்களில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காக ஒரு கட்டத்துக்கு மேல் ஒயிட் பால் கிரிக்கெட்டையே கைவிட்டார். கடைசியாக 2014 ஆம் ஆண்டில்தான் சர்வதேச டி20 போட்டியில் ஆடியிருந்தார். 2008 லேயே ஐ.பி.எல் தொடங்கப்பட்டுவிட்டது.

ப்ரீமியர் லீக் பாணியிலான ஆட்டங்கள் உலகம் முழுவதும் பிரபலமான போதுமே அவர் எந்த லீகிலுமே பங்குகொண்டதில்லை. இங்கிலாந்திலேயே கூட நிறைய டி20 லீகுகளை ஆரம்பித்தார்கள். ஆனால், அவற்றிலுமே கூட ஆண்டர்சன் பங்குகொண்டதில்லை. தனது ரெட்பால் கிரிக்கெட் இதனால் பாதிக்கப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து டி20 போட்டிகளை ஆண்டர்சன் தவிர்த்தே வந்தார்.
நான் இனிமேல் இங்கிலாந்துக்கு ஆடப்போவதில்லை. ஆனால், என்னிடம் எஞ்சியிருக்கும் கிரிக்கெட் சார்ந்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தி 100 தொடரை பார்க்கிறேன். அதில் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. என்னால் அங்கு சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கிறேன். எனக்கு முன் இருக்கும் எந்த வாய்ப்பையும் நான் நிராகரிக்க விரும்பவில்லை. யாராவது என்னிடம் விருப்பம் தெரிவித்தால் அதன்பிறகு அதுசார்ந்து முடிவெடுப்பேன். என சில வாரங்களுக்கு முன்பு ஆண்டர்சன் பேசியிருந்தார்.

அதாவது, லீக் போட்டிகளில் ஆடுவது குறித்து மறைமுகமாக தன்னுடைய விருப்பத்தை ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ஆண்டர்சன் பெயரை பதிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. நீண்ட காலமாக வெள்ளை உடையிலேயே பார்த்து பழகிய ஆண்டர்சனை விரைவிலே வண்ண உடையில் ஒரு பரபர டி20 ஆட்டத்தில் பார்க்க ரசிகர்களுமே ஆர்வமாகத்தான் இருக்கின்றனர்.
ஆண்டர்சனின் ஐ.பி.எல் வருகை எப்படியானதாக இருக்கிறது? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


