`பெண்களுக்கு மாதம் ரூ.2100, மின் கட்டணத்தில் 30% சலுகை - மகா., தேர்தலில் பாஜக கூட்டணி வாக்குறுதி!

மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோலாப்பூரில் நேற்று தொடங்கி வைத்து, கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதில் மாநிலத்தில் புதிதாக 25 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும், பெண்களுக்கு தற்போது ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.1,500 தேர்தலுக்கு பிறகு 2,100 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

``போலீஸ் வேலைக்கு 25,000 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். தற்போது ஒவ்வோர் ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.12,000 தேர்தலுக்கு பிறகு 15,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். அதோடு விவசாய விளைபொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஆதாய விலையில் 20 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணத்தில் 30 சதவீத சலுகை" உட்பட பல்வேறு சலுகைகளை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அதோடு உத்தவ் தாக்கரேயையும் விமர்சிக்க ஏக்நாத் ஷிண்டே தவறவில்லை.

உத்தவ் தாக்கரே ஆட்சி அதிகாரத்திற்காக தனது தந்தை பால் தாக்கரேயின் கொள்கைகளை கைவிட்டதாகவும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக மகாவிகாஷ் அகாடி அமைந்தது என்றும் தெரிவித்தார். மொத்தம் 10 தேர்தல் வாக்குறுதிகளை ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் அடிக்கடி குஜராத்தை உயர்த்தி பேசி மகாராஷ்டிராவிற்கு துரோகம் செய்கிறார். மகாராஷ்டிராவிற்கு கிடைத்துள்ள முதலீட்டில் 52 சதவீதம் பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்த பிறகுதான் வந்தது என்றார். முன்னதாக சதாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஷிண்டே, ``எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி அரசு ஆட்சிக்கு வந்தால், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான நிதியுதவி, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உட்பட 11 மக்கள் நலத்திட்டங்களை மூடிவிடுவார்கள். ஆனால் அவ்வாறு நடக்க விடமாட்டோம். நாங்கள் சிறைக்குச் சென்றாலும் அத்திட்டத்தை நிறுத்தவிடமாட்டோம் என்றார்.

உத்தவ் தாக்கரேயும் கோலாப்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் தனது உரையில், ``மகாவிகாஷ் அகாடி ஆட்சிக்கு வந்தால் பருப்பு, உணவு தானியம் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும். மும்பையில் மராத்தியர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண்கள் காவல் நிலையம் உருவாக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.