Suresh Gopi: திருச்சூர் பூரம் ஆம்புலன்ஸ் விவகாரம்; சுரேஷ் கோபி மீது 2வது வழக்கு; பின்னணி என்ன?

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற விழா திருச்சூர் பூரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்த திருச்சூர் பூரம் விழாவில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பது போன்ற புதிய சில கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்தனர். அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் பக்தர்கள் கொந்தளித்தனர். அதை பா.ஜ.க தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

திருச்சூர் பூரத்தில் மக்கள் போராட்டம் நடத்தியபோது அங்கு அமைச்சர்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சேவாபாரதி ஆம்புலன்ஸில் சுரேஷ் கோபி அங்குச் சென்றதாகவும், அதற்கு காவல்துறை உதவியதாகவும், அதனால்தான் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வென்றதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. திருச்சூர் பூரத்தின்போது நடந்த பிரச்னையை பா.ஜ.க சாதகமாகப் பயன்படுத்த சி.பி.எம் அரசு உதவி செய்ததாக முதல்வர் பினராயி விஜயன் மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றம் சாட்டினார்.

சுரேஷ் கோபி

திருச்சூர் பூரத்தின்போது நடந்த பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறியது. அதிலும் குறிப்பாக காவல்துறை ஏ.டி.ஜி.பி அஜித்குமார் வேண்டும் என்றே பா.ஜ.க வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்தார் எனத் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ஐ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுகுறித்து விசாரிக்க முதல்வர் பினராயி விஜயன் அரசு அப்போதே உத்தரவிட்டிருந்தார். 5 மாதங்களுக்குப்பின்பு கடந்த செப்டம்பர் மாதம் அந்த விசாரணை குறித்த அறிக்கை வெளியானது. அதில் திருச்சூர் பூரம் விழாவில் பிரச்னை ஏற்பட காவல்துறைதான் காரணம் எனச் சாக்குப்போக்கான காரணங்கள் கூறப்பட்டிருந்தன. குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறை ஏ.டி.ஜி.பி தலைமையில் விசாரணை நடத்தினால் அறிக்கை இப்படித்தான் இருக்கும் எனக் காங்கிரஸும், பினராயி விஜயன் ஆட்சியில் கூட்டணி வகிக்கும் சி.பி.ஐ கட்சியும் அதிருப்தி தெரிவித்தன.

இந்த நிலையில் அவசர தேவைக்காகப் பயன்படுத்தும் ஆம்புலன்ஸில் அப்போதைய பா.ஜ.க வேட்பாளரான சுரேஷ் கோபி திருச்சூர் பூரத்துக்கு வந்தது குற்றகரமான செயல் எனவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ கட்சி நிர்வாகி சுமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐ.பி.சி செக்‌ஷன் 279, 34 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 179, 184, 188, 192 உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் மீது திருச்சூர் கிழக்கு போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். நோயாளிகளைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தும் ஆம்புலன்ஸில் சுரேஷ் கோபி பயணித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி ஆம்புலன்ஸில் திருச்சூர் செல்லும் காணொளி காட்சிகளும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் கோபி

இரு ஒருபுறம் இருக்க சேலக்கரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் பூரம் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாகத் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி அனூப் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் பாகமாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவலால் பரபரத்துகிடக்கிறது கேரள அரசியல் களம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.