வாழ்க வசவாளர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
இன்று கொளத்தூரில் அரசுத் திட்ட விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``2017-ம் ஆண்டு அனிதா தற்கொலை செய்துகொண்டபோது நாம் தாங்கொனா துயரத்தில் ஆழ்ந்தோம். நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தொடர்பான தமிழ்நாட்டு மக்களின் குரலுக்கு ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அனிதா நினைவாக 2019-ம் ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் அனிதா அச்சீவ்மென்ட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்து வருகின்றனர். கொளத்தூரில் முதல்வன் படிப்பகம், கலைஞர் கண் மருத்துவமனை என ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திவருகிறோம்.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் என ஏராளமான மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர். ஆனால், பல கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த அரசு எதையும் செய்யவில்லை எனக் குறைக்கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். இளைஞர்களை ஊக்குவிக்கிறோம், தொழில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கிறோம். அதனால்தான், தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். அதற்கு தேவையான மனித ஆற்றலை உருவாக்க கல்லூரிகளை உருவாக்கிவருகிறோம்.
தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல்... அது சரியாக நடக்கிறதா என களத்துக்குச் சென்று ஆய்வு செய்யும் முதல்வனாக நான் செயல்பட்டு வருகிறேன். சமீபத்தில் வந்த சென்னை மழையின் பாதிப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், முதல்வர் தொடங்கி கட்சியின் அடிமட்டத் தொண்டர், தன்னார்வலர்களான மக்கள் எனப் பலரின் ஒத்துழைப்பில் இந்த பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
சிலர் பழைய மழை பாதிப்புகளின் வீடியோ, படங்களை வெளியிட்டு விமர்சித்தார்கள். அவர்களுக்கெல்லாம் திமுக வளர்வது பிடிக்கவில்லை. அதனால்தான் புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் எனப் பேசிவருகிறார்கள். அவர்களையெல்லாம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... 4 ஆண்டுகளைத் தொடப்போகும் இந்த திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களெல்லாம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இந்த நேரத்தில் அண்ணாவின் ஒரு வாக்கியத்தை நினைவுப் படுத்துகிறேன் `வாழ்க வசவாளர்கள்... உங்களின் வசச் சொற்களுக்கெல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்களின் போக்கு மக்களுக்கு நல்லது செய்வதுதான். உங்களுக்கெல்லாம் பதில்சொல்ல வேண்டிய தேவையும், அவசியமும் இல்லை. மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் போதவில்லை. எங்களின் பணி என்னவென்பது மக்களுக்குத் தெரியும்." எனப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


