INDvNZ: `முடிச்சுவிட்ட நியூசிலாந்து- 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒயிட் வாஷ்; வான்கடேவில் சரிந்த இந்தியா
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. 147 என்கிற சிறிய டார்கெட்டை கூட எட்ட முடியாமல் இந்திய அணி கடுமையாக சொதப்பித் தோற்றிருக்கிறது. இதன் மூலம் இந்தத் தொடரில் ஒயிட் வாஷூம் அடைந்திருக்கிறது.
நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் 146 ரன்கள் முன்னிலைப் பெற்று இந்தியாவுக்கு 147 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது. இன்றைய நாளின் முதல் செஷனிலேயே இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கிவிட்டது. முழுமையாக மூன்று நாட்கள் இந்தியாவின் கையில் இருந்தது. இந்தியா எட்ட வேண்டியது மிகக்குறைவான டார்கெட்தான். அதனால் ரிஸ்க் எடுக்காமல் பொறுமையாக நின்று ஆடியிருந்தாலே எளிதாக மூன்றாவது செஷனுக்குள் போட்டியை முடித்திருக்கலாம். ஆனால், இந்திய அணிக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. ஒரு திட்டமிடலே இல்லாமல் கன்னாபின்னாவென ஆடியது. கேப்டன் ரோஹித் சர்மா தனது பொறுப்பை உணராமலேயே கடந்த இன்னிங்ஸ்களில் ஆடியதைப் போல தாறுமாறாக ஆடி அவுட் ஆனார். மேட் ஹென்றியின் பந்தில் ஷாட் ஆட வாட்டம் இல்லாத அந்த பந்தை அப்படி வம்படியாக ஆட வேண்டிய எந்தத் தேவையுமே இல்லை. ஆனாலும் மூன்றாவது ஓவரிலேயே அப்படி ஒரு No Brainer ஷாட்டை ஆடினார். ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கக் கூடிய பிட்ச்சில் வேகத்துக்கு அவுட் ஆகி இந்தியாவின் ஒயிட் வாஷூக்கான ரெட் ரிப்பனை வெட்டி வைத்தார்.
மற்ற வீரர்களெல்லாம் ஸ்பின்னர்களுக்கு எதிராக வழக்கம்போல கடுமையாக திணறினர். அஜாஷின் பந்து எங்கே திரும்புகிறது என்பதைக் கூட கணிக்க முடியாமல் ஸ்மார்ட்டாக லீவ் செய்கிறேன் என்ற பெயரில் க்ளீன் போல்டானார் கில்.
சரியாக டிபன்ஸ் ஆட முடியாமல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார் கோலி. பேட்டுக்கு பதில் பேடை விட்டு ஜெய்ஸ்வால் lbw ஆகினார். சர்ப்ராஸ் வழக்கம்போல இரண்டாவது பந்தையே பறக்கவிட முயற்சித்து கேட்ச். ஜடேஜாவால் இங்கேயும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பண்ட் மட்டும் நின்று அஜாஷ் படேலின் பந்துகளை பறக்கவிட்டார். ஆனால், அவரும் 60 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவருக்கு அம்பயர் அவுட் கொடுத்தது தவறு என ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் தோல்விக்கு அதையெல்லாம் காரணமாக சொல்ல முடியாது. அத்தனை வீரர்களும் சொதப்பியிருக்கிறார்கள்.

சொந்த இந்திய மண்ணில் ஸ்பின் ஆட முடியாமல் திணறுகின்றனர். 147 என்கிற டார்கெட்டை எட்ட முடியாமல் வெறும் 29.1 ஓவர்களில் ஆட்டம் இழந்திருக்கின்றனர். 9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களிடம் தாரை வார்த்திருக்கின்றனர். ஒரு செஷனுக்கு தோராயமாக 30 ஓவர்கள் என வைத்துக் கொண்டாலும் இவர்கள் சொந்த மண்ணில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஒரு செஷனுக்கு கூட நின்று ஆட முடியவில்லை. அட்டாக்கிங்காக ஆடுகிறேன், ஆக்ரோஷமாக ஆடுகிறேன் என்ற பெயரில் சூழலை மறந்து நிலையை உணராமல் கண்ணைக் கட்டிக் கொண்டு ஆடியதால் அடைந்திருக்கும் தோல்வி இது.
Pinch hitter என கிரிக்கெட்டில் ஒரு பதம் உண்டு. அதாவது, ஆர்டரை மாற்றி திடீரென ஒரு பேட்டரை இறக்குவார்கள். அவர் விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுத்து வேகவேகமாக ரன்கள் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருப்பார். அவர் ரன் சேர்க்காமல் அவுட் ஆனாலும் அணி அதை பெரிய சரிவாக கருதாது. ஒட்டுமொத்த இந்திய அணியுமே இப்போது இப்படி சூழல் எதையும் உணராமல் ஆடி வரும் Pinch Hitterகளை போலத்தான் ஆடி வருகிறார்கள். டெஸ்ட்டுக்கு அந்த அணுகுமுறை மருந்துக்குக் கூட உதவாது. கம்பீர் & ரோஹித் கூட்டணி தாங்கள் நம்பும் அணுகுமுறைகளின் மீதும் தர்க்கங்களின் மீதும் சுயபரிசோதனை மேற்கொண்டு தங்களை சரிசெய்து கொள்ள வேண்டிய நேரமிது.

உள்ளூரில் கடைசியாக 2000 ஆம் ஆண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் உள்ளூரில் மீண்டும் ஒயிட் வாஷ். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருந்த இந்திய அணி இப்போது சரிவைச் சந்தித்திருக்கிறது.
இந்தியாவின் தோல்விக்கான காரணங்களாக நீங்கள் நினைப்பவற்றை கமென்ட் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


