Doctor Vikatan: இதயநோய் இருப்பவர்கள் வேகமாக நடக்கலாமா?
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளவர்கள் வேகமாக வாக்கிங் செய்யலாமா... டிரெட்மில்லில் நடப்பது, ஓடுவது போன்றவற்றைச் செய்யலாமா... வேகமாக நடப்பது இதயத்துக்கு நல்லதா, பாதிப்பை ஏற்படுத்துமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கும்போது வேகமாக நடக்கலாம். ஆனால், அப்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேகமாக நடக்கும்போது இதயத்துக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவை. அந்த ஆக்ஸிஜனானது, அடைப்பு உள்ள ரத்தக்குழாய் வழியேதான் இதயத்துக்குப் போக வேண்டும். இந்த நிலையில் அதிக களைப்பாக உணர்வது, நெஞ்சில் வலியை உணர்வது, மூச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். எனவே, அப்படி ஏதேனும் அறிகுறிகள் வந்தால் உங்கள் வேகத்தைச் சற்று குறைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடல் சொல்வதை கவனியுங்கள். இது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் விஷயம்.
சிலர், இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தாலும் என்னால் வேகமாக நடக்க முடியும் என நடப்பார்கள். அப்படி வருத்திக் கொண்டு செய்யும்போது இதயத்தின் பம்ப்பிங் செயல்பாடுகளில் பிரச்னை ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதே தெரியாமல் உடலை வருத்தி சில விஷயங்களைச் செய்வோருக்கு இந்த ரிஸ்க் இருக்கிறது. அதுவே, அடைப்பு இருப்பது தெரிந்தால் அதை சரி செய்வதற்கான நிறைய வழிகள் இன்று இருக்கின்றன. உதாரணத்துக்கு, இதயத்தின் முக்கியமான ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் பொருத்துவது போன்ற பல சிகிச்சைகளும், மருந்துகளும் இருக்கின்றன.

இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என சந்தேகம் இருந்தால் தாமதிக்காமல் இதயநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களுக்கு டிரெட்மில் பரிசோதனையைப் பரிந்துரைப்பார். இதயத்துடிப்பில் ஏதேனும் பிரச்னை உள்ளதா, அடைப்பு இருப்பதற்கான சந்தேகத்தைத் தருகிறதா என்றெல்லாம் அதில் கண்டுபிடிக்கலாம்.
எத்தனை மணி நேரம் நடக்க முடிகிறது, எவ்வளவு வேகத்தில் நடக்க முடிகிறது, நடக்கும்போது ஏதேனும் பிரச்னை வருகிறதா என்பதையெல்லாம் டிரெட்மில் டெஸ்ட்டில் கண்டுபிடிக்கலாம். எனவே, இந்தக் கேள்விக்கு பொதுவான பதில் சொல்வதைவிட, சம்பந்தப்பட்ட நபருக்கான பர்சனல் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும்தான் சரியான தீர்வுகளாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


