Spain: வெள்ளத்தால் 160 பேர் உயிரிழப்பு.. பேரழிவு குறித்து விளக்கும் காலநிலை ஆராய்ச்சியாளர்கள்!
ஸ்பெயின் நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி ஏறத்தாழ 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த திங்களன்று தொடங்கி மறுநாள் வரை பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்பெயினின் சில பகுதிகளில் ஒரு மாதம் பெய்யும் மழையின் அளவு, திடீரென 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களின் நிலை கவலைக்கிடமானது. சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால், மக்கள் தங்கள் வீடுகளுகளிலிருந்து வெளியேற வழியின்றி சிக்கித் தவித்தனர்.
மரங்கள் பல முறிந்தது மற்றும் சாலைகளும் ரயில் பாதைகளும் துண்டிக்கப்பட்டது. எண்ணற்ற பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது. பல சாலைகள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், வலென்சியா முழுவதும் இருக்கும் 15,5000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவிக்கின்றனர். சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்புப் பணியாளர்கள் சில பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த பேரழிவிற்கு காரணம் கோட்டா ஃப்ரியா (Gota Fria) அல்லது டானா (DANA) என்ற காலநிலை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த காலநிலை ஐரோப்பிய நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மிகவும் பொதுவான வானிலை நிகழ்வு ஆகும். 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் DANA என்ற சொல் உருவாக்கப்படுவதற்கு முன்பு, "கோட்டா ஃப்ரியா" என்ற சொல் அதிதீவிர கனமழையை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது.
DANA காலநிலை என்பது குளிர் மற்றும் சூடான காற்று சந்தித்து சக்திவாய்ந்த மழை மேகங்களை உருவாக்குவதாகும். இது காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் டானா ஒரு பொது நிகழ்வாக இருப்பினும் புவி வெப்பமடைதல் காரணமாக பல இடங்களில் புயல்களை இன்னும் தீவிரமாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெதுவெதுப்பான காற்று அதிக நீரைத் தக்கவைத்து வெளியிடுகிறது. மெடிட்டேரியன் கடலும் வெப்பமடைந்து வரும் நிலையில், ஆகஸ்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையை எட்டி இருந்தது.
மெடிட்டேரியன் கடலிலுள்ள சூடான நீரில் குளிர்ந்த காற்று வீசும் போது வெப்பமான காற்று விரைவாக உயரும் மற்றும் அடர்த்தியான, நீர் நிறைந்த மேகங்களை உருவாக்கும். அவை பல மணிநேரங்களுக்கு அதே பகுதியில் இருந்து பலத்த மழையை உருவாக்கும். இந்நிகழ்வு சில நேரங்களில் பெரிய ஆலங்கட்டி புயல்கள் மற்றும் சூறாவளியை தூண்டுகிறது. இந்த காலநிலை இந்த வாரம் காணப்பட்டதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




கிழக்கு மற்றும் தெற்கு ஸ்பெயின் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் மெடிட்டேரியன் கடலுக்கும் இடையில் இருப்பதால், இந்த காலநிலையால் பாதிக்கப்பட்டது. வலென்சியா பகுதியில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மூன்று மிகத் தீவிரமான புயல்களில் இந்த வார டானாவால் ஏற்பட்ட புயலும் ஒன்றாகும் என்று ஸ்பெயின் நாட்டின் தேசிய வானிலை நிறுவனமான ஏமெட்டின் செய்தித் தொடர்பாளர் ரூபன் டெல் காம்போ கூறினார்.
மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய நாட்டில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பெருவெள்ளம் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 31 முதல், மூன்று நாள்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். இன்னும் தீவிர காலநிலை தொடர்வதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஸ்பெயினின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான வலென்சியா, முர்சியா மற்றும் மலகா போன்ற நகரங்களில் ஒரு மாதத்திற்கு மேலான பெய்ய வேண்டிய மழையளவு, ஒரே நாளில் பெருமழையாக பெய்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அண்டலூசியா பகுதியில் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக பெய்துள்ளது.

1996 -ல் பைரனீஸ் மலைகளில் முகாம் தளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 87 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் ஜூலை 2021 -ல் ஐரோப்பாவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம், ருமேனியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவில் 243 பேர் உயிரிழந்தனர். இவை ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளங்கள் ஆகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


